யோவான் 1:28-51 - WCV
28
இவை யாவும் யோர்தான் ஆற்றுக்கு அக்கரையிலுள்ள பெத்தானியாவில் நிகழ்ந்தன. அங்குதான் யோவான் திருமுழுக்குக் கொடுத்துக் கொண்டிருந்தார்.
29
மறுநாள் இயேசு தம்மிடம் வருவதைக் கண்ட யோவான், “இதோ! கடவுளின் ஆட்டுக்குட்டி! ஆட்டுக்குட்டியாம் இவரே உலகின் பாவத்தைப் போக்குபவர்.
30
எனக்குப்பின் வரும் இவர் என்னைவிட முன்னிடம் பெற்றவர்: ஏனெனில் எனக்கு முன்பே இருந்தார் என்று நான் இவரைப்பற்றியே சொன்னேன்.
31
இவர் யாரென்று எனக்கும் தெரியாதிருந்தது. ஆனால் இஸ்ரயேல் மக்களுக்கு இவரை வெளிப்படுத்தும் பொருட்டே நான் வந்துள்ளேன்: தண்ணீரால் திருமுழுக்குக் கொடுத்தும் வருகிறேன்” என்றார்.
32
தொடர்ந்து யோவான் சான்றாகக் கூறியது: “தூய ஆவி புறாவைப்போல வானிலிருந்து இறங்கி இவர் மீது இருந்ததைக் கண்டேன்.
33
இவர் யாரென்று எனக்கும் தெரியாதிருந்தது. ஆனால் தண்ணீரால் திருமுழுக்குக் கொடுக்கும்படி என்னை அனுப்பியவர் “தூய ஆவி இறங்கி யார்மீது இருப்பதைக் காண்பீரோ அவரே தூய ஆவியால் திருமுழுக்குக் கொடுப்பவர்” என்று என்னிடம் சொல்லியிருந்தார்.
34
நானும் கண்டேன்: இவரே இறைமகன் எனச் சான்றும் கூறிவருகிறேன்.”
35
மறு நாள் யோவான் தம் சீடர் இருவருடன் மீண்டும் அங்கு நின்று கொண்டிருந்தார்.
36
இயேசு அப்பக்கம் நடந்து சென்று கொண்டிருந்தார். யோவான் அவரைக் கூர்ந்து பார்த்து, “இதோ! கடவுளின் ஆட்டுக்குட்டி” என்றார்.
37
அந்தச் சீடர் இருவரும் அவர் சொன்னதைக் கேட்டு இயேசுவைப் பின் தொடர்ந்தனர்.
38
இயேசு திரும்பிப் பார்த்து, அவர்கள் தம்மைப் பின் தொடர்வதைக் கண்டு,”என்ன தேடுகிறீர்கள்?” என்று அவர்களிடம் கேட்டார். அவர்கள், “ரபி, நீர் எங்கே தங்கியிருக்கிறீர்?” என்று கேட்டார்கள்.
39
அவர் அவர்களிடம், “வந்து பாருங்கள்”என்றார். அவர்களும் சென்று அவர் தங்கியிருந்த இடத்தைப் பார்த்தார்கள். அப்போது ஏறக்குறைய மாலை நான்கு மணி. அன்று அவர்கள் அவரோடு தங்கினார்கள்.
40
யோவான் சொன்னதைக் கேட்டு இயேசுவைப் பின்தொடர்ந்த இருவருள்”அந்திரேயா ஒருவர். அவர் சீமோன் பேதுருவின் சகோதரர்.
41
அவர் போய் முதலில் தம் சகோதரரான சீமோனைப் பார்த்து, “மெசியாவைக் கண்டோம்” என்றார். “மெசியா” என்றால் அருள்பொழிவு பெற்றவர் என்பது பொருள்.
42
பின்பு அவர் சீமோனை இயேசுவிடம் அழைத்து வந்தார். இயேசு அவரைக் கூர்ந்து பார்த்து, “நீ யோவானின் மகன் சீமோன். இனி “கேபா” எனப்படுவாய் என்றார். “கேபா” என்றால் “பாறை” என்பது பொருள்.
43
மறு நாள் இயேசு கலிலேயாவுக்குச் செல்ல விரும்பினார். அப்போது அவர் பிலிப்பைக் கண்டு, “என்னைப் பின்தொடர்ந்து வா” எனக் கூறினார்.
44
பிலிப்பு பெத்சாய்தா என்னும் ஊரைச் சேர்ந்தவர். அந்திரேயா, பேதுரு ஆகியோரும் இவ்வூரையே சேர்ந்தவர்கள்.
45
பிலிப்பு நத்தனியேலைப் போய்ப் பார்த்து, இறைவாக்கினர்களும் திருச்சட்ட நூலில் மோசேயும் குறிப்பிட்டுள்ளவரை நாங்கள் கண்டுகொண்டோம். நாசரேத்தைச் சேர்ந்த யோசேப்பின் மகன் இயேசுவே அவர்” என்றார்.
46
அதற்கு நத்தனியேல்,”நாசரேத்திலிருந்து நல்லது எதுவும் வர முடியுமோ?” என்று கேட்டார். பிலிப்பு அவரிடம், “வந்து பாரும்” என்று கூறினார்.
47
நத்தனியேல் தம்மிடம் வருவதை இயேசு கண்டு,”இவர் உண்மையான இஸ்ரயேலர், கபடற்றவர்” என்று அவரைக் குறித்துக் கூறினார்.
48
நத்தனியேல், “என்னை உமக்கு எப்படித் தெரியும்?” என்று அவரிடம் கேட்டார். இயேசு, “பிலிப்பு உம்மைக் கூப்பிடுவதற்கு முன்பு நீர் அத்திமரத்தின்கீழ் இருந்த போதே நான் உம்மைக் கண்டேன்” என்று பதிலளித்தார்.
49
நத்தனியேல் அவரைப் பார்த்து, “ரபி, நீர் இறை மகன்: நீரே இஸ்ரயேல் மக்களின் அரசர்” என்றார்.
50
அதற்கு இயேசு,”உம்மை அத்திமரத்தின்கீழ் கண்டேன் என்று உம்மிடம் சொன்னதாலா நம்புகிறீர்? இதைவிடப் பெரியவற்றைக் காண்பீர்” என்றார்.
51
மேலும் “வானம் திறந்திருப்பதையும் கடவுளின் தூதர்கள் மானிடமகன்மீது ஏறுவதையும் இறங்குவதையும் காண்பீர்கள் என மிக உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்” என்று அவரிடம் கூறினார்.