59
தலைமைக் குருக்களும், தலைமைச் சங்கத்தார் அனைவரும் இயேசுவுக்கு மரண தண்டனை விதிக்க அவருக்கு எதிராகப் பொய்ச் சாட்சி தேடினர்.
60
பல பொய்ச் சாட்சிகள் முன்வந்தும் ஏற்ற சாட்சி கிடைக்கவில்லை. இறுதியாக இருவர் முன்வந்தனர்.
61
அவர்கள், “இவன் கடவுளுடைய திருக்கோவிலை இடித்து அதை மூன்று நாளில் கட்டியெழுப்ப என்னால் முடியும் என்றான் “ என்று கூறினார்கள்.
62
அப்பொழுது தலைமைக் குரு எழுந்து அவரிடம், “இவர்கள் உனக்கு எதிராகக் கூறும் சான்றுக்கு மறுமொழி கூறமாட்டாயா? “ என்று கேட்டார்.
63
ஆனால் இயேசு பேசாதிருந்தார். மேலும் தலைமைக் குரு அவரிடம், “நீ கடவுளின் மகனாகிய மெசியாவா? வாழும் கடவுளின் பெயரால் ஆணையிட்டுச் சொல்லுமாறு உன்னிடம் கேட்கிறேன் “ என்றார்.
64
அதற்கு இயேசு, “நீரே சொல்லுகிறீர்: மானிட மகன் வல்லவராம் கடவுளின் வலப்புறத்தில் வீற்றிருப்பதையும் வான மேகங்கள்மீது வருவதையும் இதுமுதல் நீங்கள் காண்பீர்கள் என உங்களுக்குச் சொல்கிறேன் “ என்றார்.
65
உடனே தலைமைக் குரு தம் மேலுடையை கிழித்துக்கொண்டு, “இவன் கடவுளைப் பழித்துரைத்தான். இன்னும் நமக்குச் சான்றுகள் தேவையா? இதோ, இப்பொழுது நீங்களே பழிப்புரையைக் கேட்டீர்களே.
66
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? “ என்று கேட்டார். அதற்கு அவர்கள், “இவன் சாக வேண்டியவன் “ எனப் பதிலளித்தார்கள்.