16
“குருட்டு வழிகாட்டிகளே, ஐயோ! உங்களுக்குக் கேடு! யாராவது திருக்கோவிலின்மீது ஆணையிட்டால் ஒன்றுமில்லை: ஆனால் அவர் கோவிலின் பொன்மீது ஆணையிட்டால் அதை நிறைவேற்றக் கடமைப்பட்டவர் என்கிறீர்கள்.
17
குருட்டு மடையரே! எது சிறந்தது? பொன்னா? பொன்னைத் தூயதாக்கும் திருக்கோவிலா?
18
யாராவது பலிபீடத்தின்மீது ஆணையிட்டால் ஒன்றுமில்லை: ஆனால் அவர் அதில் படைக்கப்பட்ட காணிக்கையின்மீது ஆணையிட்டால் அதை நிறைவேற்றக் கடமைப்பட்டவர் என்கிறீர்கள்.
19
குருடரே! எது சிறந்தது? காணிக்கையா? காணிக்கையைத் தூயதாக்கும் பலிபீடமா?
20
எனவே பலிபீடத்தின்மீது ஆணையிடுகிறவர் அதன்மீதும் அதன்மேலுள்ள அனைத்தின்மீதும் ஆணையிடுகிறார்.
21
திருக்கோவிலின்மீது ஆணையிடுகிறவர் அதன்மீதும் அதில் குடிகொண்டிருக்கிறவர்மீதும் ஆணையிடுகிறார்.
22
வானத்தின் மீது ஆணையிடுகிறவர் கடவுளின் அரியணைமீதும் அதில் வீற்றிருக்கிற கடவுள்மீதும் ஆணையிடுகிறார்.
23
“வெளிவேடக்கார மறைநூல் அறிஞரே, பரிசேயரே, ஐயோ! உங்களுக்குக் கேடு! நீங்கள் புதினா, சோம்பு, சுpரகம் ஆகியவற்றில் பத்தில் ஒரு பங்கைப் படைக்கிறீர்கள். ஆனால் திருச்சட்டத்தின் முக்கிய போதனைகளாகிய நீதி, இரக்கம், நம்பிக்கை ஆகியவற்றைக் கடைப்பிடிக்காமல் விட்டு விடுகிறீர்கள். இவற்றைக் கண்டிப்பாய்க் கடைப்பிடிக்க வேண்டும். அவற்றையும் விட்டுவிடக்கூடாது.