1
அதன் பின்னர் இஸ்ரயேல் மக்கள் புறப்பட்டு யோர்தானுக்கு அக்கரையில் எரிகோவுக்கு அருகிலுள்ள மோவாபிய சமவெளிகளில் பாளையமிறங்கினார்கள்.
2
சிப்போர் மகன் பாலாக்கு இஸ்ரயேல் எமோரியருக்குச் செய்திருந்த அனைத்தையும் கண்டான்.
3
இஸ்ரயேல் மக்களின் எண்ணிக்கை முன்னிட்டு மோவாபு பெரிதும் கலங்கிற்று: அம்மக்களைப் பற்றிய அச்சம் மோவாபை மேற்கொண்டது.
4
மோவாபு மிதியானின் மூப்பர்களிடம், “மாடு வயல்வெளியில் புல்லை வேரற மேய்வது போல் இக்கும்பலும் நம்மைச் சுற்றியுள்ள எல்லாவற்றையும் மேய்ந்துவிடும்” என்று கூறிற்று.அச்சமயம் மோவாபிய மன்னன், சிப்போர் மகன் பாலாக்கு.
5
அவன் பெத்தோரைச் சார்ந்த பெகோரின் மகன் பிலயாமை அழைத்துவரத் தூதரை அனுப்பினான்: அந்த இடம் ஆமாபு நாட்டின் ஆற்றருகே இருந்தது.அவன் கூறியது: இதோ ஒரு மக்கள் கூட்டம் எகிப்திலிருந்து வெளியேறி வந்திருக்கிறது: அவர்கள் நிலம் முழுவதையும் நிரப்பிக் கொண்டிருக்கிறார்கள்: அவர்கள் எனக்கு எதரில் குடியேறியிருக்கிறார்கள்.
6
இப்போதே நீர் புறப்பட்டு வந்து எனக்காக இம்மக்களைச் சபித்துவிடும்: அவர்கள் என்னிலும் மிகவும் வலிமை மிக்கவராய் இருக்கின்றனர்: ஒரு வேளை நான் அவர்களை முறியடித்து நாட்டிலிருந்து துரத்தக்கூடும்: ஏனெனில், நீர் எவனுக்கு ஆசி வழங்குவீரோ அவன் ஆசிபெறுவான், நீர் எவனைச் சபிப்பீரோ அவன் சாபம் அடைவான் என்று நான் அறிவேன்.
7
அங்ஙனமே மோவாபு மூப்பரும் மிதியான் மூப்பரும் குறிசொல்வதற்கான கட்டணத்தையும் கையில் எடுத்துக்கொண்டு புறப்பட்டுப் போயினர்.அவர்கள் பிலயாமிடம் வந்து பாலாக்கு அனுப்பிய செய்தியைச் சொன்னார்கள்.
8
அவர் அவர்களிடம், “இந்த இரவில் இங்குத் தங்கியிருங்கள்: ஆண்டவர் என்னோடு பேசுகிறபடி நான் உங்களுக்கு வார்த்தை தருவேன்” என்றார்.அவ்வாறே மோவாபின் தலைவர்கள் பிலயாமுடன் தங்கினார்கள்.
9
கடவுள் பிலயாமிடம் வந்து, “உன்னோடிருக்கிற இந்த ஆள்கள் யார்?” என்று கேட்டார்.
10
பிலயாம் கடவுளிடம், “மோவாபின் மன்னனான சிப்போர் மகன் பாலாக்கு என்னிடம் அனுப்பியுள்ளான்:
11
”இதோ ஒரு மக்கள் கூட்டம் எகிப்திலிருந்து வெளியேறி வந்திருக்கிறது: அவர்கள் நிலம் முழுவதையும் நிரப்பிக் கொண்டிருக்கிறார்கள்: இப்போதே நீர் புறப்பட்டு வந்து எனக்காக அவர்களைச் சபித்துவிடும்: ஒரு வேளை நான் அவர்களுடன் போரிட்டு அவர்களை நாட்டிலிருந்து துரத்திவிடக்கூடும்” என்றுகூறியனுப்பியுள்ளான்” என்றார்.
12
கடவுள் பிலயாமிடம், “நீ அவர்களோடு போக வேண்டாம்: அம்மக்களைச் சபிக்கவும் வேண்டாம்: ஏனெனில் அவர்கள் ஆசி பெற்றோர்” என்று கூறினார்.
13
அப்படியே பிலயாம் காலையில் எழுந்து பாலாக்கு அனுப்பிய தலைவர்களிடம், “உங்கள் சொந்த நாட்டுக்குப் போங்கள்: நான் உங்களோடு வருவதற்கு ஆண்டவர் அனுமதி மறுத்துவிட்டார்” என்று சொன்னார்.
14
அதன்படி மோவாபின் தலைவர்கள் எழுந்து பாலாக்கிடம் போய், “பிலயாம் எங்களுடன் வர மறுக்கிறார்” என்றார்கள்.
15
மீண்டும் பாலாக்கு அவர்களைவிட மதிப்பில் உயர்ந்த இன்னும் பல தலைவர்களை அனுப்பினான்.
16
அவர்கள் பிலயாமிடம் வந்து, “சிப்போர் மகன் பாலாக்கு கூறுவது, “என்னிடம் நீர் வருவதைத் தடுக்க எதற்கும் இடம் கொடாதேயும் :
17
உறுதியாக நான் உமக்கு மிகுந்த மரியாதை செய்வேன்: நீர் எனக்குச் சொல்லுவதையெல்லாம் நான் செய்வேன்: வாரும், இந்த மக்களை எனக்காகச் சபியும்” என்றனர்.
18
ஆனால் பிலயாம் பாலாக்கின் அலுவலர்களிடம் பதில் மொழியாகக் கூறியது: பாலாக்கு தன் வீடு நிறைய வெள்ளியும், பொன்னும் எனக்குத் தந்தாலும் என் கடவுளாகிய ஆண்டவரின் கட்டளையைக் குறைவாகவோ கூடுதலாகவோ என்னால் மீற முடியாது:
19
இன்றிரவு நீங்கள் தங்கிச் செல்லுங்கள்: ஆண்டவர் கூடுதலாக எனக்கு அறிவிக்கலாம்.
20
கடவுள் இரவில் பிலயாமிடம் வந்து அவரிடம், “இந்த ஆள்கள் உன்னை அழைக்க வந்தால் நீ எழுந்து அவர்களுடன் போ: ஆயினும் நான் சொல்வதை மட்டுமே நீ செய்ய வேண்டும்” என்றார்.
21
அங்ஙனமே பிலயாம் காலையில் எழுந்து தம் கழுதைக்குச் சேணங்கட்டி மோவாபின் தலைவர்களோடு போனார்.
22
ஆயினும், அவர் போனதை முன்னிட்டுக் கடவுளின் சினம் மூண்டது: ஆண்டவரின் தூதர் வழியிலே அவருக்கு எதிரியாக நின்றார்.அப்போது அவர் தம் கழுதைமேல் ஏறித் தம் பணியாளர் இருவருடன் சென்று கொண்டிருந்தார்.
23
ஆண்டவரின் தூதர் கையில் உருவிய வாளுடன் பாதையில் நின்றுகொண்டிருப்பதைக் கழுதை கண்டது: எனவே கழுதை பாதையை விட்டு விலகி வயலுக்குள் சென்றது: பாதைக்கு அது திரும்பும்படி பிலயாம் கழுதையை அடித்தார்.
24
அடுத்து ஆண்டவரின் தூதர் திராட்சைத் தோட்டங்களிடையே இருபறமும் சுவர்களுள்ள ஒரு குறகிய பாதையில் நின்றார்.
25
ஆண்டவரின் தூதரைக் கண்ட கழுதை சுவரில் முட்டிப் பிலயாம் காலைச் சுவரோடு நெருக்கியது: ஆதலால் அதை அவர் மறுபடியும் அடித்தார்.