14
காதேசிலிருந்து மோசே ஏதொம் மன்னனிடம் தூதரை அனுப்பிக் கூறியது: உன் சகோதரன் இஸ்ரயேல் கூறுவது இதுவே: எங்களுக்கு நேர்ந்த இடர்ப்பாடுகள் அனைத்தையும் நீர் அறிவீர்:
15
எங்கள் மூதாதையர் எகிப்துக்குச் சென்றனர்: நாங்கள் எகிப்திலே நெடுங்காலம் தங்கியிருந்தோம்: எகிப்தியர் எங்களையும் எங்கள் மூதாதையரையும் மிகவும் கொடுமையாக நடத்தினார்கள்:
16
நாங்கள் ஆண்டவரை நோக்கி அழுதபோது அவர் எங்கள் குரலைக் கேட்டு எங்களை எகிப்திலிருந்து வெளிக்கொணர ஒரு தூதனை அனுப்பினார்: நாங்கள் இங்கு உமது எல்லையின் ஓரத்திலுள்ள காதேசு நகரில் இருக்கிறோம்.
17
இப்போதும் உம் நாடு வழியே எங்களைப் போக விடும்: நாங்கள் வயலின் ஊடேயோ திராட்சைத் தோட்டத்தின் ஊடேயோ கடந்து செல்ல மாட்டோம்: எந்தக் கிணற்றிலிருந்தும் தண்ணீர் குடிக்கமாட்டோம்: நாங்கள் அரச நெடுஞ்சாலை வழியே செல்வோம்: உம் எல்லையைத் தாண்டும்வரை நாங்கள் வலப்புறமோ இடப்புறமோ திரும்ப மாட்டோம்.
18
ஆனால் ஏதொம், “நீங்கள் கடந்து செல்லக்கூடாது, மீறினால் நான் உங்களுக்கெதிராக வாளெடுத்து வரவேண்டியிருக்கும்”என்று அவருக்குக் கூறியனுப்பினான்.
19
இஸ்ரயேல் மக்கள் அவனிடம், “நாங்கள் நெடுஞ்சாலை வழியே செல்வோம்: நாங்களோ, எங்கள் கால்நடைகளோ, உம் தண்ணீரைக் குடித்தால், அதற்கான விலையைத் தருவோம்: கால்நடையாகக் கடந்து செல்லமட்டும் எங்களுக்கு அனுமதி தாரும், வேறெதுவும் வேண்டாம்” என்றனர்.
20
ஆனால் அவனோ, “நீங்கள் கடந்து செல்லவே கூடாது” என்று கூறிவிட்டான்.ஏதோம் திரண்ட வலிமை மிகுந்த படையோடு அவர்களுக்கெதிராக வந்தான்.
21
இவ்வாறு ஏதோம் தன் எல்லைக்குள் இஸ்ரயேலுக்கு வழி தர மறுத்தான்: எனவே இஸ்ரயேலர் அவனை விட்டு விலகிப் போயினர்.