எண்ணாகமம் 16:19-41 - WCV
19
பின் கோராகு மக்கள் கூட்டமைப்பு முழுவதையும் அவர்களுக்கெதிரே சந்திப்புக்கூடாரத்தின் நுழைவாயிலில் ஒன்று கூட்டினான்.ஆண்டவரின் மாட்சி மக்கள் கூட்டமைப்பு முழுவதற்கும் தோன்றியது.
20
ஆண்டவர் மோசேயிடமும் ஆரோனிடமும்,
21
”ஒரு நொடியில் நான் இவர்களை எரித்து விடும்படி இந்த மக்கள் கூட்டமைப்பிலிருந்து உங்களைப் பிரித்துக் கொள்ளுங்கள்” என்றார்.
22
அவர்களோ முகங்குப்புறவிழுந்து, “கடவுளே! உடல் பூண்ட உயிர்கள் அனைத்துக்கும் கடவுளே! ஒரேயொருவன் பாவம் செய்திருக்க மக்கள் கூட்டமைப்பு முழுவதன் மீதும் நீர் சினங்கொள்வது ஏன்?” என்றனர்.
23
உடனே ஆண்டவர் மோசேயிடம்,
24
”கோராகு, தாத்தான், அபிராம் ஆகியோரின் கூடாரத்தை விட்டு அகன்று போகும்படி மக்கள் கூட்டமைப்பிடம் சொல்” என்றார்.
25
மோசே எழுந்து தாத்தானிடமும் அபிராமிடமும் போனார்: இஸ்ரயேல் மூப்பர் அவருக்குப் பின்னால் சென்றனர்.
26
அவர் மக்கள் கூட்டமைப்பிடம், “இந்தப் பொல்லாத மனிதரின் பாவங்களோடு சேர்ந்து நீங்கள் அழிக்கப்படாதபடி அவர்கள் கூடாரங்களை விட்டு அகன்று போகும்படி உங்களை வேண்டுகிறேன்: அவர்களுக்குரிய எதையும் தொட வேண்டாம்” என்றார்.
27
அவ்வாறே கோராகு, தாத்தான், அபிராம் ஆகியோரின் கூடாரத்தை விட்டு அவர்கள் அகன்றனர்: தாத்தானும் அபிராமும் வெளியே வந்து தங்கள் மனைவியர், புதல்வர், குழந்தைகளோடு தங்கள் கூடாரங்களின் வாயிலருகில் நின்றனர்.
28
மோசே கூறியது: இப்பணிகளையெல்லாம் செய்யும்படி ஆண்டவர் என்னை அனுப்பியிருக்கிறார், இது என் சொந்த விருப்பம் அல்ல என்பதை இதன்மூலம் அறிந்து கொள்வீர்கள்.
29
எல்லா மனிதரும் சாவதுபோல் இம்மனிதரும் செத்தால் அல்லது எல்லா மனிதருக்கும் விதிக்கப்பட்ட தண்டனையை அடைந்தால் ஆண்டவர் என்னை அனுப்பியிருக்கவில்லை என்பது பொருள்.
30
ஆனால் ஆண்டவர் புதுமையான ஒன்றைச் செய்தால் நிலம் தன் வாயைத் திறந்து அவர்களையும் அவர்களுக்குரிய அனைத்தையும் விழுங்கிவிட, அவர்கள் உயிரோடு பாதாளத்துக்குள் இறங்கினால் அப்போது, இம்மனிதர் ஆண்டவரை இழிவுபடுத்தி விட்டார்கள் என்பதை நீங்களும் அறிந்துகொள்வீர்கள்.
31
இவ்வார்த்தைகளையெல்லாம் அவர் பேசி முடிந்ததும் அவர்கள் அடியிலிருந்த தரை பிளந்தது:
32
தரை தன் வாயைத் திறந்து, அவர்களை அவர்கள் வீட்டாரோடும் கோராகைச் சேர்ந்த மனிதர்களோடும் அவர்கள் உடைமைகளோடும் விழுங்கிவிட்டது.
33
இவ்வாறு, அவர்களும் அவர்களைச் சேர்ந்த அனைவரும் உயிரோடு பாதாளத்துக்குள் இறங்கினர்: தரை தன் வாயை மூடிக்கொண்டது: சபையிலிருந்து அவர்கள் அழிந்து போயினர்.
34
அவர்களின் கூக்குரல் கேட்டு அவர்களைச் சுற்றியிருந்த இஸ்ரயேலர் அனைவரும், “நம்மையும் தரை விழுங்கி விடக்கூடாதே” என்று அஞ்சியோடினர்.
35
பின்பு, ஆண்டவரிடமிருந்து நெருப்பு புறப்பட்டு வந்து தூபம் காட்டிய இரு நூற்றைம்பது மனிதரையும் விழுங்கிவிட்டது.
36
பின்னர் ஆண்டவர் மோசேயிடம் கூறியது:
37
எரிநெருப்பிலிருந்து தூப கலசங்களை எடுத்து நெருப்பை அப்பால் கொட்டிவிடும்படி குருவாகிய ஆரோன் மகன் எலயாசரிடம் சொல்.
38
ஏனெனில் அவை புனிதமானவை: பாவம் செய்த இந்த மனிதர்களின் தூபகலசங்கள், அவர்களது உயிர் பறிக்கப்பட்டுவிட்டதால், தூய்மையாக்கப்பட்டுவிட்டன: அவை பீடத்தை மூடும் தகடுகளாக அடிப்பு வேலையால் செய்யப்படட்டும்: அவற்றை அவர்கள் ஆண்டவர் திருமுன் கொண்டு வந்தார்கள்: ஆகவேதான் அவை புனிதமானவை: இங்ஙனம் அவை இஸ்ரயேல் மக்களுக்கு ஓர் அடையாளமாக இருக்கும்.
39
அதன்படியே குரு எலயாசர் எரிக்கப்பட்டவர்கள் கொண்டு வந்திருந்த வெண்கலத் தூபகலசங்களை எடுத்தார்: பீடத்தை மூடுவதற்கு அவை அடிப்பு வேலையாகச் செய்யப்பட்டன.
40
இது இஸ்ரயேல் மக்களுக்கு ஒரு நினைவுச் சின்னம்: இதனால் ஆரோன் வழித் தோன்றியிராத எவனும் கோராகையும் அவன் கூட்டத்தவரையும் போன்று ஆகிவிடாதபடி ஆண்டவர் திருமுன் தூபங்காட்டுவதற்கு நெருங்கி வரத் துணியான்: மோசே மூலம் ஆண்டவர் எலயாசருக்குச் சொன்னதும் அதுவே.
41
ஆயினும் மறுநாளில் இஸ்ரயேல் மக்கள் கூட்டமைப்பு முழுதும் மோசேக்கும் ஆரோனுக்கும் எதிராக முறுமுறுத்து, “ஆண்டவரின் மக்களை நீங்கள் கொன்றுவிட்டீர்கள்” என்றனர்.