1
லேவியின் மகன் கோகாத்துக்குப் பிறந்த இட்சகாரின் புதல்வன் கோராகும், ரூபன் வழிவந்த எலியாபு புதல்வர்கள் தாத்தான், அபிராமும், பெலேத்தின் மகன் ஓனம்,
2
இஸ்ரயேல் மக்களில் சிலரைச் சேர்த்துக்கொண்டு மோசேக்கு எதிராக எழும்பினர்.இவர்கள் மக்கள் கூட்டமைப்பிலிருந்து சபையில் தெரிந்தெடுக்கப்பட்ட பேர்பெற்ற இருநூற்றைம்பது தலைவர்கள் ஆவர்.
3
அவர்கள் மோசேக்கும் ஆரோனுக்கும் எதிராகக் கூடி வந்து அவர்களிடம், “நீங்கள் மிதமிஞ்சிப் போய்வீட்டீர்கள்: மக்கள் கூட்டமைப்பு முழுவதிலுமுள்ள ஒவ்வொருவரும் தூயவர்தாம்: ஆண்டவரும் அவர்களோடு இருக்கிறார்: அப்படியிருக்க ஏன் ஆண்டவரின் சபைக்கு மேலாக உங்களை உயர்த்திக் கொள்கிறீர்கள்?” என்று கேட்டனர்.
4
மோசே இதைக் கேட்டு முகங்குப்புற விழுந்தார்.
5
அவர் கோராகிடமும் அவன் கூட்டத்தவரிடமும் கூறியது: காலையில் ஆண்டவர் தம்முடையவன் யார், தூய்மையானவன் யார் என்று காட்டி அவனைத் தம்மருகே வரச் செய்வார்: தாம் தெரிந்துகொண்டவனையே அவர் தம்மருகே வரச் செய்வார்:
6
செய்யவேண்டியது இதுவே: கோராகே! அவன் கூட்டத்தவரே! தூபக் கலசங்களை எடுத்துக் கொள்ளுங்கள்:
7
நாளை ஆண்டவர் திருமுன் அவற்றில் நெருப்பையும் தூபத்தையும் போடுங்கள்: ஆண்டவர் தெரிந்து கொள்ளுகிற மனிதனே தூயவனாயிருப்பான்: லேவியின் புதல்வரே! நீங்கள்தாம் மிதமிஞ்சிப் போய் விட்டீர்கள்.
8
மேலும் மோசே கோராகிடம் கூறியது: லேவியின் புதல்வரே! இப்போதும் கேளுங்கள்:
9
இஸ்ரயேலின் கடவுள் உங்களைத் தம்மருகில் வரச்செய்து, ஆண்டவரின் திருவுறைவிடத்தல் நீங்கள் பணி செய்யவும் மக்கள் கூட்டமைப்பின்முன் நின்று அவர்களுக்குச் சேவை செய்யவும் இஸ்ரயேல் மக்கள் கூட்டமைப்பிலிருந்து உங்களைப் பிரித்தெடுத்தது அற்பமான காரியமா?
10
அவர் உன்னையும் லேவியின் புதல்வரின் உன் சகோதரர் அனைவரையும் தம்மருகில் வரச் செய்தாரே! இதனோடு குருத்துவத்தையும் நாடுவீர்களோ?
11
ஆதலால் நீயும் உன் கூட்டத்தவரும் ஆண்டவருக்கு எதிராகவே இருக்கிறீர்கள்: ஆரோனுக்கு எதிராக நீங்கள் முறுமுறுப்பதற்கு அவர் யார்?
12
பின் மோசே ஆளனுப்பி எலியாபின் புதல்வர் தாத்தானையும் அபிராமையும் அழைத்தார்.அவர்களோ, “நாங்கள் வர மாட்டோம்:
13
இப்பாலை நிலத்தில் எங்களைக் கொல்லும்படி, பாலும் தேனும் வழிந்தோடும் நாட்டிலிருந்து எங்களைக் கொண்டு வந்து, இப்போது எங்கள்மேல் நீர் உம்மை அதிகாரியாக்கிக் கொள்வது அற்பமான காரியமா?
14
மேலும் பாலும் தேனும் வழிந்தோடும் நாட்டிற்கு நீர் எங்களைக் கொண்டு வரவுமில்லை: திராட்சைத் தோட்டங்களை எங்களுக்கு உரிமைச் சொத்தாகக் கொடுக்கவுமில்லை: இம்மனிதர்களின் கண்களைப் பிடுங்கி விடுவீரோ? நாங்கள் வரவே மாட்டோம்” என்றனர்.
15
மோசே கடுஞ்சினம் கொண்டார்.அவர் ஆண்டவரிடம், “இவர்கள் படையலை ஏற்க வேண்டாம்: இவர்களிடமிருந்து ஒரு கழுதையைக் கூட நான் வாங்கியதில்லை: இவர்களில் ஒருவனுக்கும் நான் தீங்கிழைத்ததில்லை” என்றார்.
16
பின் மோசே கோராகிடம், “நீயும் உன் கூட்டத்தார் எல்லாரும்-நீயும் அவர்களும் ஆரோனும் நாளை ஆண்டவர் திருமுன் வந்து நில்லுங்கள்:
17
உங்களுள் ஒவ்வொருவனும் தன் தூப கலசத்தை எடுத்து, அதில் தூபமிட்டு, ஆளுக்கு ஒன்றாக மொத்தம் இருநூற்றைம்பது தூப கலசங்களை, ஆண்டவர் திருமுன் கொண்டு வரட்டும்.நீயும் ஆரோனும் உங்கள் தூப கலசங்களைக் கொண்டு வாருங்கள்” என்றார்.
18
அவ்வாறே ஒவ்வொருவனும் தன் தூப கலசத்தை எடுத்துக்கொண்டான்: அவர்கள் அவற்றில் நெருப்பையும் தூபத்தையும் போட்டார்கள்: அவர்கள் சந்திப்புக் கூடாரத்தின் நுழைவாயிலில் மோசேயுடனும் ஆரோனுடனும் நின்றார்கள்.
19
பின் கோராகு மக்கள் கூட்டமைப்பு முழுவதையும் அவர்களுக்கெதிரே சந்திப்புக்கூடாரத்தின் நுழைவாயிலில் ஒன்று கூட்டினான்.ஆண்டவரின் மாட்சி மக்கள் கூட்டமைப்பு முழுவதற்கும் தோன்றியது.
20
ஆண்டவர் மோசேயிடமும் ஆரோனிடமும்,
21
”ஒரு நொடியில் நான் இவர்களை எரித்து விடும்படி இந்த மக்கள் கூட்டமைப்பிலிருந்து உங்களைப் பிரித்துக் கொள்ளுங்கள்” என்றார்.
22
அவர்களோ முகங்குப்புறவிழுந்து, “கடவுளே! உடல் பூண்ட உயிர்கள் அனைத்துக்கும் கடவுளே! ஒரேயொருவன் பாவம் செய்திருக்க மக்கள் கூட்டமைப்பு முழுவதன் மீதும் நீர் சினங்கொள்வது ஏன்?” என்றனர்.
23
உடனே ஆண்டவர் மோசேயிடம்,
24
”கோராகு, தாத்தான், அபிராம் ஆகியோரின் கூடாரத்தை விட்டு அகன்று போகும்படி மக்கள் கூட்டமைப்பிடம் சொல்” என்றார்.
25
மோசே எழுந்து தாத்தானிடமும் அபிராமிடமும் போனார்: இஸ்ரயேல் மூப்பர் அவருக்குப் பின்னால் சென்றனர்.
26
அவர் மக்கள் கூட்டமைப்பிடம், “இந்தப் பொல்லாத மனிதரின் பாவங்களோடு சேர்ந்து நீங்கள் அழிக்கப்படாதபடி அவர்கள் கூடாரங்களை விட்டு அகன்று போகும்படி உங்களை வேண்டுகிறேன்: அவர்களுக்குரிய எதையும் தொட வேண்டாம்” என்றார்.
27
அவ்வாறே கோராகு, தாத்தான், அபிராம் ஆகியோரின் கூடாரத்தை விட்டு அவர்கள் அகன்றனர்: தாத்தானும் அபிராமும் வெளியே வந்து தங்கள் மனைவியர், புதல்வர், குழந்தைகளோடு தங்கள் கூடாரங்களின் வாயிலருகில் நின்றனர்.
28
மோசே கூறியது: இப்பணிகளையெல்லாம் செய்யும்படி ஆண்டவர் என்னை அனுப்பியிருக்கிறார், இது என் சொந்த விருப்பம் அல்ல என்பதை இதன்மூலம் அறிந்து கொள்வீர்கள்.
29
எல்லா மனிதரும் சாவதுபோல் இம்மனிதரும் செத்தால் அல்லது எல்லா மனிதருக்கும் விதிக்கப்பட்ட தண்டனையை அடைந்தால் ஆண்டவர் என்னை அனுப்பியிருக்கவில்லை என்பது பொருள்.
30
ஆனால் ஆண்டவர் புதுமையான ஒன்றைச் செய்தால் நிலம் தன் வாயைத் திறந்து அவர்களையும் அவர்களுக்குரிய அனைத்தையும் விழுங்கிவிட, அவர்கள் உயிரோடு பாதாளத்துக்குள் இறங்கினால் அப்போது, இம்மனிதர் ஆண்டவரை இழிவுபடுத்தி விட்டார்கள் என்பதை நீங்களும் அறிந்துகொள்வீர்கள்.
31
இவ்வார்த்தைகளையெல்லாம் அவர் பேசி முடிந்ததும் அவர்கள் அடியிலிருந்த தரை பிளந்தது:
32
தரை தன் வாயைத் திறந்து, அவர்களை அவர்கள் வீட்டாரோடும் கோராகைச் சேர்ந்த மனிதர்களோடும் அவர்கள் உடைமைகளோடும் விழுங்கிவிட்டது.
33
இவ்வாறு, அவர்களும் அவர்களைச் சேர்ந்த அனைவரும் உயிரோடு பாதாளத்துக்குள் இறங்கினர்: தரை தன் வாயை மூடிக்கொண்டது: சபையிலிருந்து அவர்கள் அழிந்து போயினர்.
34
அவர்களின் கூக்குரல் கேட்டு அவர்களைச் சுற்றியிருந்த இஸ்ரயேலர் அனைவரும், “நம்மையும் தரை விழுங்கி விடக்கூடாதே” என்று அஞ்சியோடினர்.
35
பின்பு, ஆண்டவரிடமிருந்து நெருப்பு புறப்பட்டு வந்து தூபம் காட்டிய இரு நூற்றைம்பது மனிதரையும் விழுங்கிவிட்டது.