எண்ணாகமம் 14:28-35 - WCV
28
நீங்கள் அவர்களிடம் சொல்லவேண்டியது, “ஆண்டவர் கூறுவதாவது: என் உயிர் மேல் ஆணை! என் செவிகளில்படுமாறு நீங்கள் சொன்னதையே நான் உங்களுக்குச் செய்வேன்:
29
எனக்கெதிராக முறுமுறுத்த, இருபது வயதும் அதற்கு மேலும் எண்ணப்பட்ட மொத்தத் தொகையினரான நீங்கள் இப்பாலைநிலத்pல் பிணங்களாக விழுவீர்கள்.
30
நீங்கள் குடியிருக்கும்படி நான் வாக்களித்த நாட்டிற்குள் எப்புன்னே மகன் காலேபையும் நூன் மகன் யோசுவாவையும் தவிர ஒருவருமே வரமாட்டீர்கள்.
31
ஆனால் இரையாகிவிடப்போவதாக நீங்கள் கருதிய உங்கள் குழந்தைகளை நான் கொண்டு போய்ச் சேர்ப்பேன்: நீங்கள் இழிவாய் எண்ணின நாட்டை அவர்கள் கண்டறிவார்கள்.
32
உங்களைப் பொறுத்தமட்டில் நீங்கள் இப் பாலைநிலத்தில் பிணங்களாக விழுவீர்கள்.
33
நாற்பது ஆண்டுகள் உங்கள் பிள்ளைகள் இப் பாலைநிலத்தில் அலைந்து திரிவர்: உங்கள் நம்பிக்கைத் துரோகத்திற்காக இப் பாலைநிலத்தில் உங்களுள் கடைசி ஆள்பிணமாக விழும்வரை அவர்கள் துன்புறுவர்.
34
நீங்கள் நாட்டை உளவு பார்த்த நாள்களின் எண்ணிக்கைப்படி ஒரு நாளைக்கு ஒரு ஆண்டாக நாற்பது நாள்களுக்கும் நாற்பது ஆண்டுகள் நீங்கள் குற்றப்பழியைச் சுமப்பீர்கள்: என் வெறுப்பையும் அறிந்துகொள்வீர்கள்.
35
ஆண்டவராகிய நானே பேசியுள்ளேன்: எனக்கெதிராக ஒன்று கூடிய இப்பொல்லாத மக்கள் கூட்டமைப்பு முழுவதற்கும் இதை நான் கட்டாயம் செய்துமுடிப்பேன்: இப்பாலைநிலத்தில் அவர்கள் முற்றிலும் அழிந்தொழிந்து அங்கேயே மடிவார்கள்.”