11
உன்னைப் பொறுத்தமட்டில் உன்னோடு நான் செய்த உடன்படிக்கையின் இரத்தத்தை முன்னிட்டு, சிறைப்பட்டிருக்கும் உன்னைச் சார்ந்தோரை நீரற்ற படுகுழியிலிருந்து விடுவிப்பேன்.
12
நம்பிக்கையுடன் காத்திருக்கும் சிறைக் கைதிகளே, உங்கள் அரணுக்குத் திரும்பி வாருங்கள்: இருமடங்கு நன்மைகள் நான் உங்களுக்குத் தருவேன் என்று நான் இன்று உங்களுக்கு அறிவிக்கிறேன்.
13
நான் யூதாவை என் வில்லாக்கிக் கொண்டேன்: எப்ராயிமை அம்பாக அமைத்துக்கொண்டேன்: சீயோனே! உன் மக்களை யவனருக்கு எதிராக ஏவிவிட்டு உன்னை வல்லவனின் வாள் போல் ஆக்குவேன்.
14
அப்போது அவர்கள்மீது ஆண்டவர் தோன்றுவார். அவரது அம்பு மின்னலைப்போல் பாய்ந்து செல்லும்: தலைவராகிய ஆண்டவர் எக்காளம் ஊதி ஒலி எழுப்புவார்: அவர் தென்திசைச் சூறாவளிக்கு இடையே நடந்து வருவார்.
15
படைகளின் ஆண்டவர் அவர்களுக்கு அடைக்கலமாய் இருப்பார்: அவர்கள் தங்கள் பகைவரை ஒழித்துக்கட்டி, அவர்களுடைய கவண் கற்களை மிதித்துப்போடுவார்கள்: திராட்சை இரசத்தைப்போல் அவர்களது குருதியைக் குடிப்பார்கள்: கிண்ணம்போல் நிரம்பி வழிந்தும், பலிபீடத்தின் கொம்புகளைப் போல் நனைந்தும், இரத்தத்தால் நிறைந்திருப்பார்கள்.
16
அந்நாளில் அவர்களுடைய கடவுளாகிய ஆண்டவர், தம் மக்களாகிய அவர்களை ஆயர் தம் மந்தையை மீட்பது போல் மீட்டருள்வார்: அவர்களும் அவரது நாட்டில் மணிமுடியில் பதிக்கப்பட்டுள்ள கற்களைப்போல் ஒளிர்வார்கள்.
17
ஆம், அக்காட்சி எத்துணை இனியது: எத்துணை அழகியது: கோதுமை இளங்காளையரையும் புதுத்திராட்சை இரசம் கன்னியரையும் செழிப்புறச் செய்யும்.