சகரியா 14:12-19 - WCV
12
எருசலேமுக்கு எதிராகப் போர்தொடுத்த எல்லா மக்களினங்களையும் வதைக்கும் பொருட்டு ஆண்டவர் அனுப்பும் கொள்ளை நோய் இதுவே. அவர்கள் நடமாடிக் கொண்டிருக்கும்போதே ஒவ்வொருவனது சதையும் அழுகிப்போகும். அவர்களுடைய கண்கள் தம் குழிகளிலேயே அழுகிப்போகும். நாக்குகளும் வாய்க்குள்ளேயே அழுகி விடும்.
13
அந்நாளில் ஆண்டவர் அவர்களுக்கிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்துவார்: அப்போது அவர்கள் ஒவ்வொருவரும், அடுத்திருப்பார்மேல் கைவைப்பர்: அடுத்திருப்பாருக்கு எதிராகக் கையை ஓங்குவர்.
14
யூதாவும்கூட எருசலேமுக்கு எதிராகப் போர்தொடுக்கும்: அப்போது சுற்றிலுமுள்ள வேற்றினத்தாரின் செல்வங்களாகிய பொன், வெள்ளி, ஆடைகள் பெருமளவில் திரட்டப்படும்.
15
அவர்களுக்குக் கொள்ளைநோய் வந்தது போலவே அவர்களுடைய பாளையங்களில் இருக்கும் குதிரைகள், கோவேறு கழுதைகள், ஒட்டகங்கள், கழுதைகள் முதலிய எல்லா விலங்குகளுக்கும் கொள்ளைநோய் வரும்.
16
பின்பு எருசலேமுக்கு எதிராக எழும்பிய வேற்றினத்தாரில் எஞ்சியிருக்கும் அனைவரும் படைகளின் ஆண்டவராகிய அரசரைத் தொழவும் கூடாரத் திருவிழாவைக் கொண்டாடவும் ஆண்டுதோறும் அங்கே போவர்.
17
உலகின் இனத்தார் எவரேனும் படைகளின் ஆண்டவராகிய அரசரைத் தொழ எருசலேமுக்குப் போகவில்லை என்றால் அவர்கள் நாட்டில் மழை பெய்யாது.
18
எகிப்து நாட்டினர் அவரை வழிபட வரவில்லையாயின் அவர்களுக்கும் மழை இல்லாமற் போகும். கூடாரத் திருவிழாவைக் கொண்டாட வராத மக்களினங்களை வதைத்த அதே கொள்ளைநோய் அவர்களையும் வதைக்கும்.
19
இது எகிப்தின் பாவத்திற்கும் கூடாரத் திருவிழாவைக் கொண்டாட வராத மற்றெல்லா வேற்றினத்தாரின் பாவத்திற்கும் கிடைக்கும் பயன்.