10
நான் தாவீது குடும்பத்தார்மேலும், எருசலேமில் குடியிருப்போர்மேலும் இரக்க உள்ளத்தையும் மன்றாடும் மனநிலையையும் பொழிந்தருள்வேன். அப்போது அவர்கள் தாங்கள் ஊடுருவக் குத்தியவனையே உற்றுநோக்குவார்கள்: அவனை உற்று நோக்கி ஒரே பிள்ளையைப் பறிகொடுத்து ஓலமிட்டு அழுபவரைப் போலும், இறந்துபோன தம் தலைப் பிள்ளைக்காகக் கதறி அழுபவர் போலும் மனம் கசந்து அழுவார்கள்.
11
அந்நாளில் எருசலேமில் எழும்பும் ஓலம் மெகிதோவின் சமவெளியில் அதத்ரிம்மோனின் புலம்பலைப்போலப் பெரிதாயிருக்கும்.
12
நாடு முழுவதும் குடும்பம் குடும்பமாக புலம்பிக் கொண்டிருக்கும்: தாவீது குடும்பத்தாரின் குடும்பங்கள் ஒருபுறம் தனித்தும், அவர்களுடைய பெண்கள் மற்றொரு புறம் தனித்தும், நாத்தான் குடும்பத்தாரின் குடும்பம் ஒருபுறம் தனித்தும், அவர்களுடைய பெண்கள் மற்றொரு புறம் தனித்தும்,
13
லேவி குடும்பத்தாரின் குடும்பங்கள் ஒருபுறம் தனித்தும், அவர்களுடைய பெண்கள் மற்றொரு புறம் தனித்தும், சிமயி குடும்பங்கள் ஒருபுறம் தனித்தும், அவர்களுடைய பெண்கள் மற்றொரு புறம் தனித்தும் புலம்பி அழுவார்கள்.
14
எஞ்சியுள்ள எல்லாக் குடும்பங்களிலும் ஒவ்வொரு குடும்பமும் தனித்தனியேயும் அவற்றிலுள்ள பெண்கள் தனித்தனியேயும் புலம்பி அழுவார்கள்.