6
“யூதா குடும்பத்தை ஆற்றல் மிக்கதாய் ஆக்குவேன்: யோசேப்பு குடும்பத்தை மீட்டருள்வேன்: அவர்கள்மீது இரக்கம் கொண்டுள்ளதால் அவர்களை நான் திரும்பி வரச்செய்வேன்: அவர்கள் என்னால் தள்ளிவிடப்படாதவர்களைப் போல் இருப்பார்கள்: ஏனெனில், நானே அவர்களுடைய கடவுளாகிய ஆண்டவர்: நான் அவர்களின் மன்றாட்டுக்கு மறுமொழி அளிப்பேன்.
7
எப்ராயிம் மக்கள் ஆற்றல்மிக்க வீரரைப்போலாவார்கள்: திராட்சை மது அருந்தியவரின் உள்ளத்தைப்போல் அவர்கள் உள்ளம் களிப்படையும்: அவர்கள் பிள்ளைகளும் அதைக் கண்டு மகிழ்ச்சியுறுவார்கள்: ஆண்டவரில் அவர்கள் இதயம் மகிழ்ந்து களிப்புறும்.
8
சீழ்க்கை ஒலி எழுப்பி நான் அவர்களைச் சேர்த்துக் கொள்வேன்: ஏனெனில் நானே அவர்களை மீட்டருள்வேன்: முன்போலவே அவர்கள் பல்கிப் பெருகுவார்கள்.
9
மக்களினங்களிடையே நான் அவர்களைச் சிதறடித்தாலும், தொலை நாடுகளில் என்னை அவர்கள் நினைத்துக் கொள்வார்கள்: தங்கள் மக்களோடு வாழ்ந்து திரும்பி வருவார்கள்.