1
கலகம் செய்ததும் தீட்டுப்பட்டதும் மக்களை ஒடுக்கியதுமான நகருக்கு ஐயோ கேடு!
2
எந்தச் சொல்லுக்கும் அவள் செவி சாய்ப்பதில்லை: கண்டிப்புரையை அவள் ஏற்பதுமில்லை: ஆண்டவர்மேல் அவள் நம்பிக்கை வைப்பதில்லை: தன் கடவுளை அண்டி வருவதுமில்லை.
3
அந்நகரின் தலைவர்கள் கர்ச்சனை செய்யும் சிங்கங்கள்: அதன் நீதிபதிகள், மாலையில் கிடைப்பதை காலைவரை வைத்திராத ஓநாய்கள்.
4
அதன் இறைவாக்கினர் வீண் பெருமை பேசும் வஞ்சகமிக்க மனிதர்: அதன் குருக்கள் புனிதமானதைக் களங்கப்படுத்தித் திருச்சட்டத்தை உதறித் தள்ளுபவர்கள்.
5
அதனுள் இருக்கும் ஆண்டவரோ நீதியுள்ளவர்: அவர் கொடுமை செய்யாதவர்: காலைதோறும் அவர் தமது தீர்ப்பை வழங்குகின்றார்: வைகறைதோறும் அது தவறாமல் வெளிப்படும்: ஆனால் கொடியவனுக்கு வெட்கமே இல்லை.
6
வேற்றினத்தாரை நான் வெட்டி வீழ்த்தினேன்: அவர்களுடைய கோட்டைகளைத் தகர்த்தெறிந்தேன்: அவர்களுடைய தெருக்களை வெறுமையாக்கினேன்: அவற்றில் நடந்துசெல்பவர் எவருமில்லை: யாரும் இராதபடி, எவரும் குடியிராதபடி அவர்களுடைய நகர்கள் பாழடைந்து போயின.