ஆபகூக் 1:5-10 - WCV
5
நீங்கள் உங்களைச் சூழந்துள்ள வேற்றினத்தாரைக் கூர்ந்து கவனியுங்கள்: கவனித்து வியப்பும் திகைப்பும் அடையுங்கள்: ஏனெனில் உங்கள் வாழ்நாளில் நான் செயல் ஒன்றைச் செய்திடுவேன்: விளக்கிச் சொன்னாலும் அதை நீங்கள் நம்பமாட்டீர்கள்.
6
நான் கல்தேயர் இனத்தை எழுப்பவிருக்கிறேன்: அது பரபரப்பும் கொடுமையும்”உடைய இனம்: தங்களுக்குச் சொந்தமில்லாத இருப்பிடங்களைக் கவர, உலகின் ஒருமுனை முதல் மறுமுனைவரை சுற்றித் திரியும் இனம்.
7
அவர்கள் அச்சமும் திகிலும் உண்டாக்குகின்றவர்கள்: தங்களுடைய நீதியையும் பெருமையையும் தாங்களே உருவாக்குகின்றவர்கள்.
8
வேங்கையைவிட அவர்களின் குதிரைகள் விரைவாய் ஓடுகின்றன: அவை மாலை வேளையில் திரியும் ஓநாய்களைவிடக் கொடியவை: அவர்களுடைய குதிரை வீரர்கள் பாய்ந்து வருகின்றார்கள். இரைமேல் பாயும் கழுகைப்போல் பறந்து வருகின்றார்கள்.
9
அவர்கள் யாவரும் வன்முறை செய்யவே முன்னேறி வருகின்றார்கள்: அவர்கள் முன்னேறும்போது எல்லாரும் கலங்கித் திகைக்கின்றார்கள். மணல்போல எண்ணற்ற மக்களைச் சிறைப்படுத்துகின்றார்கள்.
10
அரசர்களை அவர்கள் ஏளனம் செய்கின்றார்கள்: அதிகாரிகளை எள்ளி நகையாடுகின்றார்கள்: அரண்களை எல்லாம் பார்த்து நகைக்கின்றார்கள்: மண்மேடுகளை எழுப்பி அவற்றைப் பிடிக்கின்றார்கள்.