மீகா 7:1-7 - WCV
1
ஐயோ! நான் கோடைக்காலக் கனிகளைக் கொய்வதற்குச் சென்றவனைப் போலானேன்: திராட்சை பறித்து முடிந்தபின் பழம் பறிக்கச் சென்றவனைப் போலானேன்: அப்பொழுது தின்பதற்கு ஒரு திராட்சைக் குலையும் இல்லை: என் உள்ளம் விரும்பும் முதலில் பழுத்த அத்திப் பழம்கூட இல்லை:
2
நாட்டில் இறைப்பற்றுள்ளோர் அற்றுப்போனார்: மனிதருள் நேர்மையானவர் எவருமே இல்லை. அவர்கள் அனைவரும் இரத்தப் பழிவாங்கப் பதுங்கிக் காத்திருக்கின்றனர்: ஒருவர் ஒருவரைப் பிடிக்கக் கண்ணி வைத்து வேட்டையாடுகின்றனர்.
3
தீமை செய்வதில் அவர்கள் கைதேர்ந்தவர்கள்: தலைவனும் நீதிபதியும் கையூட்டுக் கேட்கின்றனர்: பெரிய மனிதர் தாம் விரும்பியதை வாய்விட்டுக் கூறுகின்றனர்: இவ்வாறு நெறிதவறி நடக்கின்றனர்.
4
அவர்களுள் சிறந்தவர் முட்செடி போன்றவர்! அவர்களுள் நேர்மையாளர் வேலிமுள் போன்றவர்! அவர்களுடைய காவலர்கள் அறிவித்த தீர்ப்பின் நாள் வந்துவிட்டு: இப்பொழுதே அவர்களுக்குத் திகில்.
5
அடுத்திருப்பவன்மீது நம்பிக்கை கொள்ளவேண்டாம்: தோழனிடத்திலும் நம்பிக்கை வைக்க வேண்டாம். உம் மார்பில் சாய்ந்திருக்கிற மனைவி முன்பும் உன் வாய்க்குப் பூட்டுப்போடு!
6
ஏனெனில், மகன் தன் தந்தையை அவமதிக்கின்றான்: மகள் தன் தாய்க்கு எதிராக எழும்புகின்றாள், மருமகள், தன் மாமியாரை எதிர்க்கின்றாள்: ஒருவரின் பகைவர் அவரது வீட்டில் உள்ளவரே ஆவர்.
7
நானோ, ஆண்டவரை விழிப்புடன் நோக்கியிருப்பேன்: என்னை மீட்கும் என் கடவுளுக்காகக் காத்திருப்பேன். என் கடவுள் எனக்குச் செவிசாய்த்தருள்வார்.