10
உன் சகோதரன் யாக்கோபுக்கு எதிராக நீ செய்த கொடுமையை முன்னிட்டு, நீ வெட்கி நாணுவாய். நீ என்றுமே இல்லாது ஒழிந்து போவாய்.
11
அயல்நாட்டார் யாக்கோபின் செல்வத்தைக் கொள்ளையிட்ட அந்நாளில்- வெளிநாட்டார் அவன் வாயில்களுக்குள் புகுந்து எருசலேமுக்காகத் தங்களுக்குள் சீட்டுப்போட்ட அந்நாளில்- நீ விலகி நின்று அவர்களுள் ஒருவனாக இருந்தாயே!
12
நீ உன் சகோதரனுடைய நாளைக் கண்டு, அவனுடைய வேதனை நாளைக் கண்டு மகிழ்ச்சியடையாது இருந்திருக்க வேண்டும்: யூதாவின் மக்களைப் பார்த்து அவர்களின் அழிவு நாளில் களிப்படையாது இருந்திருக்க வேண்டும்: அவர்களின் துன்ப நாளில் இறுமாப்படையாது இருந்திருக்க வேண்டும்:
13
என் மக்கள் துன்புற்ற நாளில், அவர்களுடைய வாயில்களுக்குள் நுழையாது இருந்திருக்க வேண்டும்: அவர்கள் கேடுற்ற நாளில், அவர்களின் அழிவைக் குறித்து மகிழ்ச்சியடையாது இருந்திருக்க வேண்டும். அவர்கள் அழிவுற்ற நாளில், அவர்களின் பொருள்களைக் கொள்ளையடிக்காது இருந்திருக்க வேண்டும்.
14
அவர்களுள் தப்பி ஓடியவர்களை வெட்டி வீழ்த்தும்படி வழிச் சந்துகளில் பதுங்கியிராது இருந்திருக்க வேண்டும்: அவர்கள் துயருற்ற நாளில், அவர்களில் எஞ்சியோரைக் காட்டிக்கொடுக்காது இருந்திருக்க வேண்டும்.
15
ஏனெனில், ஆண்டவரின் நாள் வேற்றினத்தார் எல்லார் மேலும் வரப்போகின்றது: நீ செய்ததுபோலவே உனக்கும் செய்யப்படும்: நீ செய்த வினைகள் உன் தலைமேலேயே விழும்.
16
என் திரு மலையில், நீங்கள் என் தண்டனையாகிய பானத்தைக் குடித்தது போலவே வேற்றினத்தார் அனைவரும் குடிப்பார்கள். மேலும்குடிப்பார்ர்கள், குடித்துக் கொண்டே இருப்பார்கள்: குடித்து மயங்கிக்கிடப்பார்கள்.