லேவியராகமம் 23:34-43 - WCV
34
நீ இஸ்ரயேல் மக்களிடம் கூற வேண்டியது: ஏழாம் மாதம் பதினைந்தாம் நாளன்று ஆண்டவரின் கூடாரப்பெருவிழா தொடங்குகின்றது.அது ஏழு நாள்கள் தொடரும்.
35
முதல்நாள் திருப்பேரவை கூடும் நாள்: அன்று எத்தகைய வேலையையும் செய்யவேண்டாம்.
36
ஏழு நாள்களும் ஆண்டவருக்கு நெருப்புபலி செலுத்துங்கள்.எட்டாம் நாளன்று திருப்பேரவை கூடும்: அன்றும் ஆண்டவருக்கு நெருப்புப்பலி செலுத்துங்கள்.அது நிறைவுநாள்.அன்று எத்தகைய வேலையையும் செய்யலாகாது.
37
ஓய்வுநாளில் ஆண்டவருக்குச் செலுத்தும் காணிக்கைகள், நேர்ச்சைகள், தன்னார்வப் பலிகள் தவிர,
38
அந்தந்த நாள்களுக்கு ஏற்ப, எரிபலி, உணவுப்படையல், இரத்தப்பலி, நீர்மப்படையல் முதலிய பலிகளைச் செலுத்தத் தக்கதாகவும் சபையாய்க் கூடி அந்த நாளைப் புனிதமாய்க் கடைப்பிடியுங்கள்.இவையே நீங்கள் கொண்டாட வேண்டிய விழாக்கள்.
39
நிலத்தின் பலனைச் சேகரிக்கும் ஏழாம் மாதம் பதினைந்தாம் நாள்விழா: அது ஏழு நாளளவு கொண்டாடப்பட வேண்டும்.முதல் நாளும், எட்டாம் நாளும் ஓய்வு நாள்கள்.
40
முதல் நாள், கவர்ச்சிகரமான மரங்களின் பழங்களையும், பேரீச்ச ஓலை, மற்றும் கொழுமையான தளிர்களையும், அலரி இலைகளையும் கொண்டு வந்து, ஆண்டவர் திருமுன் மகிழ்ந்திருங்கள்.
41
ஆண்டுதோறும் ஏழு நாளளவு இப்பெருவிழா கொண்டாடப்படவேண்டும்.ஏழாம் மாதத்தில் அது கொண்டாடப்படவேண்டும்.இது நீங்கள் தலைமுறைதோறும் கடைப்பிடிக்க வேண்டிய என்றுமுள நியமம் ஆகும்.
42
ஏழு நாள் கூடாரங்களில் குடியிருங்கள்: இஸ்ரயேலில் பிறந்த யாவரும் அவ்வாறே கூடாரங்களில் குடியிருக்க வேண்டும்.
43
இஸ்ரயேலரை எகிப்திலிருந்து நான் கொண்டுவந்தபோது, அவர்கள் கூடாரங்களில் வாழ்ந்தார்கள் என்பதை இதன்மூலம் உன் வழிமரபினர் அறிந்துகொள்வர்.நானே உங்கள் கடவுளாகிய ஆண்டவர்!