4
தீர், சீதோன் நகரங்களே, பெலிஸ்தியா நாட்டின் அனைத்துப் பகுதிகளே, எனக்கும் உங்களுக்கும் என்ன வழக்கு? என்னை முற்றிலுமாகப் பழிவாங்குவது உங்கள் எண்ணமோ? அவ்வாறு நீங்கள் பழிவாங்கினால் நான் காலந்தாழ்த்தாமல் நீங்கள் செய்ததையே உங்கள் தலைமேல் வெகு விரைவில் விழச் செய்வேன்.
5
நீங்கள் என் பொன்னையும் வெள்ளியையும் எடுத்துக் கொண்டீர்கள்: விலையுயர்ந்த பொருள்களை உங்கள் அரண்மனைகளுக்கு அள்ளிக்கொண்டு போனீர்கள்.
6
யூதாவின் மைந்தரையும் எருசலேமின் மக்களையும் கிரேக்கரிடம் விற்றுவிட்டீர்கள்: இவ்வாறு அவர்கள் தங்கள நாட்டைவிட்டு வெகு தொலைவிற்குப் போகச் செய்தீர்கள்.
7
நீங்கள் விற்றுவிட்ட இடத்திலிருந்து அவர்களை இப்பொழுதே கிளர்ந்தெழச் செய்வேன்: நீங்கள் செய்த கொடுமையை உங்கள் தலை மேலேயே விழச் செய்வேன்.
8
உங்கள் புதல்வரையும் புதல்வியரையும் யூதா மக்களிடமே விற்றுவிடுவேன்: யூதா மக்களோ அவர்களைத் தொலைநாட்டவரான செபாயரிடம் விற்றுவிடுவார்கள்:” இதைக் கூறுவது ஆண்டவரே.