யோவேல் 3:1-11 - WCV
1
“அந்நாள்களில் நான் யூதா, எருசலேம் ஆகியவற்றின் துன்ப நிலைமையை மாற்றி முன்பு இருந்த நிலைமைக்கே கொண்டுவருவேன்:
2
அப்பொழுது நான் வேற்றினத்தார் அனைவரையும் ஒன்றுசேர்த்து யோசபாத்துப் பள்ளத்தாக்கிற்கு இறங்கிவரச் செய்வேன்: அங்கே நான், என் மக்களும் உரிமைச் சொத்துமாகிய இஸ்ரயேலை முன்னிட்டு அவர்களுக்கு எதிராகத் தண்டனைத் தீர்ப்பு வழங்குவேன்: ஏனெனில், அவர்கள் என் மக்களை வேற்று நாடுகளில் சிதறடித்தார்கள்: எனது நாட்டைத் தங்களுக்குள் பங்கிட்டுக்கொண்டார்கள்:
3
என் மக்கள் மேல் சீட்டுப்போட்டார்கள்: ஆண் பிள்ளையை விலைமகளுக்குக் கூலியாய்க் கொடுத்தார்கள்: பெண் குழந்தையை விலையாய்க் கொடுத்து, திராட்சை இரசம் வாங்கிக் குடித்தார்கள்.
4
தீர், சீதோன் நகரங்களே, பெலிஸ்தியா நாட்டின் அனைத்துப் பகுதிகளே, எனக்கும் உங்களுக்கும் என்ன வழக்கு? என்னை முற்றிலுமாகப் பழிவாங்குவது உங்கள் எண்ணமோ? அவ்வாறு நீங்கள் பழிவாங்கினால் நான் காலந்தாழ்த்தாமல் நீங்கள் செய்ததையே உங்கள் தலைமேல் வெகு விரைவில் விழச் செய்வேன்.
5
நீங்கள் என் பொன்னையும் வெள்ளியையும் எடுத்துக் கொண்டீர்கள்: விலையுயர்ந்த பொருள்களை உங்கள் அரண்மனைகளுக்கு அள்ளிக்கொண்டு போனீர்கள்.
6
யூதாவின் மைந்தரையும் எருசலேமின் மக்களையும் கிரேக்கரிடம் விற்றுவிட்டீர்கள்: இவ்வாறு அவர்கள் தங்கள நாட்டைவிட்டு வெகு தொலைவிற்குப் போகச் செய்தீர்கள்.
7
நீங்கள் விற்றுவிட்ட இடத்திலிருந்து அவர்களை இப்பொழுதே கிளர்ந்தெழச் செய்வேன்: நீங்கள் செய்த கொடுமையை உங்கள் தலை மேலேயே விழச் செய்வேன்.
8
உங்கள் புதல்வரையும் புதல்வியரையும் யூதா மக்களிடமே விற்றுவிடுவேன்: யூதா மக்களோ அவர்களைத் தொலைநாட்டவரான செபாயரிடம் விற்றுவிடுவார்கள்:” இதைக் கூறுவது ஆண்டவரே.
9
வேற்றினத்தாரிடையே இதைப் பறைசாற்றுங்கள்: போருக்காக நாள் குறித்து, போர் வீரர்களைக் கிளர்ந்ததெழச் செய்யுங்கள்: படை வீராகள் அனைவரும் திரண்டு வந்து, போருக்குக் கிளம்பட்டும்.
10
உங்கள் கலப்பைக் கொழுவைப் போர்வாளாக அடித்துக் கொள்ளுங்கள்: கதிரறுக்கும் அரிவாள்களை ஈட்டிகளாக வடித்துக் கொள்ளுங்கள்: வலுவற்றவனும் “நானொரு போர்வீரன்” என்று சொல்லிக் கொள்ளட்டும்.
11
சுற்றுப் புறங்களிலுள்ள வேற்று நாட்டவர்களே, நீங்கள் அனைவரும் விரைந்து வாருங்கள்: வந்து அவ்விடத்தில் ஒன்றாய்க் கூடுங்கள்: ஆண்டவரே, உம் போர் வீரர்களை அனுப்பியருளும்.