1
இஸ்ரயேலே! நீ களிப்புறாதே: மற்ற மக்களைப்போல் நீ அக்களிக்காதே. உன் கடவுளைக் கைவிட்டு நீ வேசித் தொழில் புரிந்தாய்: கதிரடிக்கும் களமெல்லாம் நீ விலைமகளின் கூலியை நாடுகின்றாய்.
2
கதிரடிக்கும் களமும், திராட்சைக் கனி பிழியும் ஆலையும் அவர்களுக்கு உணவு அளிக்கமாட்டா: புதிய திராட்சை இரசமும் இல்லாமற் போகும்.
3
ஆண்டவரின் நாட்டில் அவர்கள் குடியிருக்க மாட்டார்கள்: எப்ராயிம் எகிப்துக்குத் திரும்பிப் போவான்: அவர்கள் அசீரியாவில் தீட்டுப்பட்டதை உண்பார்கள்.
4
திராட்சை இரசத்தை ஆண்டவருக்கு நீர்மப் படையலாய் வார்க்க மாட்டார்கள்: அவர்களின் பலிகள் அவருக்கு உகந்தவை ஆகமாட்டா: அவை அவர்களுக்கு இழவு வீட்டு உணவு போலிருக்கும்: அவற்றை உண்பவர் யாவரும் தீட்டுப்படுவர்: ஏனெனில், அவை அவர்களின் பசி தீர்க்கும் உணவே ஆகும். ஆண்டவரின் கோவிலில் அவை படைக்கப்படுவதில்லை.
5
விழா நாள்களில் அவர்கள் என்ன செய்கின்றார்கள்? ஆண்டவரின் திருநாளன்று அவர்கள் செய்வதென்ன?