தானியேல் 7:23-27 - WCV
23
அவர் தொடர்ந்து பேசினார்: அந்த நான்காம் விலங்கோ உலகில் தோன்றப்போகும் நான்காம் அரசைக் குறிக்கின்றது: இது மற்றெல்லா அரசுகளையும் விட வேறுபட்டதாகும். உலக முழுவதையும் அது மிதித்துத் தூள்தூளாக நொறுக்கி விழுங்கிவிடும்.
24
அந்தப் பத்துக் கொம்புகளோ இந்த அரசினின்று தோன்றவிருக்கும் பத்து மன்னர்களைக் குறிக்கின்றன. அவர்களுக்குப் பிறகு மற்றொருவன் எழும்புவான்: முந்தினவர்களைவிட வேறுபட்டிருப்பான்: மூன்று அரசர்களை முறியடிப்பான்:
25
அவன் உன்னதர்க்கு எதிரான சொற்களைப் பேசுவான்: உன்னதரின் புனிதர்களைத் துன்புறுத்துவான்: வழிபாட்டுக் காலங்களையும் திருச்சட்டத்தையும் மாற்ற நினைப்பான். மூன்றரை ஆண்டுகள் புனிதர்கள் அவனது கையில் ஒப்புவிக்கப்படுவர்.
26
ஆனால், நீதிமன்றம் தீர்ப்பு வழங்க அமரும்: அவனது ஆட்சி அவனிடமிருந்து பறிக்கப்பட்டு, எரியுண்டு ஒன்றுமில்லாது அழிக்கப்படும்.
27
ஆட்சியும் அரசுரிமையும், வானத்தின் கீழுள்ள உலகனைத்திலும் உள்ள அரசுகளின் மேன்மையும் உன்னதரின் புனித மக்களுக்குத் தரப்படும். அவர்களது அரசு என்றென்றும் நிலைக்கும் அரசு: எல்லா அரசுகளும் அவர்களுக்குப் பணிந்து கீழ்ப்படியும்.