21
மனித சமுதாயத்தினின்று அவர் விரட்டப்பட்டார். மேலும் அவரது உள்ளம் விலங்குகளின் மனமாக மாற்றப்படவே, அவர் காட்டுக் கழுதைகளோடு வாழ்ந்துவந்தார். மனிதர்களின் அரசுகளை உன்னதரே ஆள்கின்றார் என்றும், தாம் விரும்பியவர்க்கே அவற்றை வழங்குகின்றார் என்றும் உணரும்வரை, அவர் மாடுபோல் புல்லை மேய்ந்தார்: அவரது உடல் வானத்துப் பனியில் நனைந்து கிடந்தது.
22
அவருடைய மகனாகிய பெல்சாட்சர்! இவற்றை எல்லாம் நீர் அறிந்திருந்தும் உன் இதயத்தைத் தாழ்த்திக் கொள்ளவில்லை.
23
ஆனால் விண்ணுலக ஆண்டவருக்கு எதிராக உம்மையே உயர்த்தினீர்: அவரது கோவிலின் கிண்ணங்களைக் கொண்டு வரச் செய்து, நீரும் உம் உயர்குடி மக்களும், உம்முடைய மனைவியரும் வைப்பாட்டியரும் அவற்றிலிருந்து திராட்சை மது குடித்தீர்கள்: மேலும் காணவோ, கேட்கவோ, எதையும் உணரவோ இயலாத வெள்ளி, பொன், வெண்கலம், இரும்பு, மரம், கல் ஆகியவற்றாலான தெய்வங்களைப் புகழ்ந்தீர்கள். ஆனால் உமது உயிரையும் உம் வழிகளையும் தம் கைக்குள் வைத்திருக்கும் கடவுளை நீர் பெருமைப்படுத்தவில்லை.
24
ஆகையால் அவர் இந்தக் கையைத் தம் திருமுன்னிருந்து அனுப்பி, இந்த எழுத்துகளைப் பொறிக்கச் செய்தார்.
25
பொறிக்கப்பட்ட சொற்களாவன: “மேனே மேனே, தேகேல், பார்சின்”
26
இவற்றின் உட்பொருள்: மேனே: கடவுள் உமது அரசின் நாள்களை எண்ணி வரையறுத்து அதனை முடிவுக்குக் கொண்டு வந்துவிட்டார்.
27
தேகேல்: நீர் தராசில் நிறுக்கப்பட்டீர்: எடையில் மிகவும் குறைந்துள்ளீர்.
28
பார்சின்: உமது அரசு பிரிக்கப்பட்டு மேதியருக்கும் பாரசீகருக்கும் கொடுக்கப்பட்டுள்ளது”.
29
உடனே, பெல்சாட்சரின் ஆணைப்படி, தானியேலுக்கு அரச உடை உடுத்தி, கழுத்தில் பொன்மாலை அணிவித்தனர். மேலும், அரசில் மூன்றாம் நிலையில் தானியேல் அமர்த்தப்படுவார் என்றும் முரசறைந்தனர்.
30
அன்றிரவே கல்தேய அரசனாகிய பொல்சாட்சர் கொலை செய்யப்பட்டான்.