தானியேல் 4:30-37 - WCV
30
அப்பொழுது அவன், “என் வலிமையின் ஆற்றலால் அரசன் வாழும் மாளிகையாகவும், எனது மாட்சியும் மகுடமாகவும் நான் கட்டியெழுப்பியதன்றோ இந்த மாபெரும் பாபிலோன்!” என்றான்.
31
இந்தச் சொற்களை அரசன் சொல்லி முடிக்கும் முன்பே, வானத்திலிருந்து ஒரு குரலொலி கேட்டது: “நெபுகத்னேசர் அரசனே! உனக்கே இந்தச் சொல்! உன்னுடைய அரசு உன்னிடமிருந்து அகன்று விட்டது.
32
மனித சமுதாயத்தினின்று நீ விரட்டப்படுவாய். காட்டு விலங்களோடு வாழ்ந்து, மாடுபோலப் புல்லை மேய்வாய்: மனிதர்களின் அரசை உன்னதரே ஆள்கின்றார் என்றும், தாம் விரும்பியவர்க்கே அதனைத் தந்தருள்வார் என்றும் நீ உணர்ந்து கொள்வதற்குள் ஏழு ஆண்டுகள் உன்னைக் கடந்து செல்லும்.”
33
உடனே இந்த வாக்கு நெபுகத்னேசரிடம் நிறைவேறிற்று. மனித சமுதாயத்தினின்று அவன் விரட்டப்பட்டான். மாட்டைப்போலப் புல்லை மேய்ந்தான்: தலைமயிர் கழுகுகளின் இறகு போலவும், அவனுடைய நகங்கள் பறவைகளின் நகங்கள் போலவும் வளரத் தொடங்கும்வரை அவனது உடல் வானத்தின் பனியினால் நனைந்தது.
34
குறித்த காலம் கடந்தபின், நெபுகத்னேசராகிய நான் என் கண்களை வானத்திற்கு உயர்த்தவே, என் பகுத்தறிவு எனக்கு மறுபடியும் அருளப்பட்டது. நானோ உன்னதரை வாழ்த்தி, என்றுமுள கடவுளைப் புகழ்ந்து போற்றினேன்! அவரது ஆட்சியுரிமை என்றுமே அழியாது! அவரது அரசு வழிவழி நிலைக்கும்!
35
உலகின் உயிர்கள் அனைத்தும் அவர் திருமுன் ஒன்றுமில்லை! வான்படை நடுவிலும் உலகில் வாழ்வோர் இடையிலும் அவர் தாம் விரும்புவதையே செய்கின்றார்! அவரது வலிய கையைத் தடுக்கவோ “நீர் என்ன செய்கிறீர்?” என்று அவருடைய செயல்களைப்பற்றி வினவவோ எவராலும் இயலாது!
36
அதே நேரத்தில், என் பகுத்தறிவு எனக்கு மறுபடியும் அருளப்பட்டது: என் அரசின் மேன்மைக்காக என் சீரும் சிறப்பும் எனக்கு மீண்டும் கிடைத்தன: என் அமைச்சர்களும் உயர்குடி மக்களும் என்னைத் தேடி வந்தார்கள்: எனது அரசுரிமை மீண்டும் உறுதி பெற்றது. முன்னிலும் அதிக மாண்பு எனக்குக் கிடைத்தது.
37
நெபுகத்னேசராகிய நான் விண்ணக அரசரைப் போற்றிப் புகழ்ந்து, ஏத்திப் பாடுகின்றேன்: அவருடைய செயல்கள் யாவும் நேரியவை! அவருடைய வழிவகைகள் சீரியவை! ஆணவத்தின் வழி நடப்போரை அவர் தாழ்வுறச் செய்வார்!