தானியேல் 2:3-11 - WCV
3
அரசன் அவர்களை நோக்கி, “நான் ஒரு கனவு கண்டேன்: அதனால் என்னுள்ளம் கலக்கமுற்றிருக்கிறது: நான் கண்டது இன்னதென்று அறிய விரும்புகிறேன்” என்றான்.
4
அப்பொழுது கல்தேயர் அரசனை நோக்கி, (அரமேய மொழியில்) “அரசரே! நீர் நீடுழி வாழ்க! நீர் கண்ட கனவை உம் பணியாளர்களுக்குச் சொல்லும். நாங்களும் அதன் பொருளை உமக்கு விளக்கிக் கூறுவோம்” என்று கூறினார்கள்.
5
அரசன் கல்தேயருக்கு மறுமொழியாக, “நான் கண்ட கனவையும் அதன் உட்பொருளையும் எனக்கு நீங்கள் விளக்கிக் கூறாவிடில், உங்களைக் கண்டந்துண்டமாய் வெட்டிவிடுவேன்: உங்கள் வீடுகளும் தரைமட்டமாக்கப்படும்: இது என் திண்ணமான முடிவு.
6
ஆனால் கனவையும் அதன் உட்பொருளையும் விளக்கிக் கூறுவீர்களாகில், அன்பளிப்புகளும் பரிசுகளும் பெரு மதிப்பும் என்னிடமிருந்து பெற்றுக் கொள்வீர்கள். ஆகையால் கனவையும் அதன் உட்பொருளையும் எனக்கு விளக்கிக் கூறுங்கள்” என்று கூறினான்.
7
அதற்கு அவர்கள் மீண்டும், “அரசர் அந்தக் கனவைத் தம் பணியாளர்களுக்குச் சொல்லட்டும்: அப்பொழுது அதன் உட்பொருளை விளக்கிக் கூறுவோம்” என்று பதிலளித்தார்கள்.
8
அதற்கு அரசன் மறுமொழியாகக் கூறியது: “நான் முடிவெடுத்துவிட்டேன் என்பதை அறிந்தே நீங்கள் காலம் தாழ்ந்த முயலுகிறீர்கள்: இது எனக்குத் திண்ணமாய்த் தெரியும்.
9
கனவு இன்னதென்று உங்களால் தெரிவிக்க இயலாதெனில், உங்கள் எல்லாருக்கும் ஒரே தீர்ப்புதான். சூழ்நிலை மாறும்வரை பொய்யும் புரட்டுமான வீண் கதைகளைச் சொல்ல உங்களுக்குள் உடன்பட்டிருக்கிறீர்கள். ஆதலால் கனவை முதலில் சொல்லுங்கள்: அப்பொழுதுதான் அதன் உட்பொருளையும் உங்களால் விளக்கிக் கூறமுடியும் என்பதை நான் அறிந்துகொள்ள இயலும்.”
10
கல்தேயர் மறுபடியும் அரசனை நோக்கி, “அரசரே! உமது விருப்பத்தை நிறைவேற்றக் கூடியவன் இவ்வுலகில் ஒருவனுமில்லை: வலிமையுடைய எந்தப் பேரரசனும் இத்தகைய காரியத்தை எந்த மந்திரவாதியிடமாவது, மாய வித்தைக்காரனிடமாவது, கல்தேயனிடமாவது, இதுகாறும் கேட்டது கிடையாது.
11
ஏனெனில், நீர் கேட்கும் காரியம் செயற்கரிய ஒன்று: தெய்வங்களாலன்றி வேறெவராலும் அரசருக்கு அதனைத் தெரிவிக்க முடியாது: ஆனால், மானிடர் நடுவில் தெய்வங்கள் இருத்தலில்லையே!” என்று மறுமொழி கூறினார்கள்.