தானியேல் 11:36-45 - WCV
36
“அரசன் தன் மனம்போன போக்கில் நடந்துகொள்வான். அவன் தன்னையே உயர்த்திக்கொள்வான்: எல்லாத் தெய்வத்திற்கும் மேலாகத் தன்னையே பெருமைப்படுத்திக் கொண்டு தெய்வங்களுக்கெல்லாம், இறைவனானவர்க்கே எதிராகப் பழிச்சொற்களைப் பேசுவான். இறைவனின் சினம் நிறைவேறும் நாள் வரும்வரை அவன் வாழ்க்கை வளம்பெறும்: ஏனெனில், குறிக்கப்பட்டது நடந்தேற வேண்டும்.
37
அவன் தன் தந்தையர் வழிபட்ட தெய்வங்களையோ வேறெந்தத் தெய்வத்தையோ பொருட்படுத்தாமல், அவற்றுக்கெல்லாம் மேலாகத் தன்னையே உயர்த்திக் கொள்வான்.
38
அவற்றிற்குப் பதிலாக, அரண்களின் தெய்வத்தை மட்டும் வணங்குவான். தன் தந்தையர் அறிந்திராத அந்தத் தெய்வத்தை அவன் பொன்னாலும் வெள்ளியாலும் மாணிக்கக் கல்லாலும் விலையுயர்ந்த பொருள்களாலும் பெருமைப்படுத்தி வழிபடுவான்.
39
தன் வலிமைமிக்க கோட்டைகளின் காவலர்களாக, அயல் தெய்வத்தை வழிபடும் மக்களை நியமிப்பான். அவனை அரசனாக ஏற்றுக்கொண்டவர்களைச் சிறப்பித்து, மக்களின் அதிகாரிகளாக நியமித்து, பணத்திற்காக நிலத்தைப் பிரித்துக் கொடுப்பான்.
40
முடிவுக்காலம் வரும்போது தென்திசை மன்னன் அவனைத் தாக்குவான்: வடதிசை மன்னனும் தேர்ப்படை, குதிரை வீரர்கள், கப்பற்படை ஆகியவற்றுடன் சுழற்காற்றைப் போல் அவனை எதிர்த்து வருவான்: அவன் நாடுகளுக்குள் வெள்ளம்போல் பாய்ந்து அழிவு விளைவித்துக்கொண்டே போவான்.
41
பிறகு அவன் சிறப்புமிக்க நாட்டினுள் நுழைவான். பல்லாயிரக் கணக்கானோர் அழிக்கப்படுவர்: ஆனால் ஏதோமியர், மோவாபியர், அம்மோனியரின் தலைவர்கள் ஆகியோர் மட்டும் தப்பித்துக்கொள்வர்.
42
அவன் மற்ற மாநிலங்கள் மேலும் தன் கையை ஓங்குவான்.
43
அவன் கைக்கு எகிப்து நாடும் தப்பாது. அங்குள்ள பொன், வெள்ளி முதலிய செல்வங்களையும், விலையுயர்ந்த எல்லாப் பொருள்களையும் கைப்பற்றிக்கொள்வான். லிபியரும் எத்தியோப்பியரும் அவன் பின்னே செல்வார்கள்.
44
ஆனால் கிழக்கிலும் வடக்கிலும் இருந்து வரும் செய்திகள் அவனைக் கலங்கச்செய்யும். பலரைக் கொன்றொழிப்பதற்கு அவன் பெரும் சீற்றத்துடன் புறப்பட்டுச் செல்வான்.
45
பிறகு கடலுக்கும் மாட்சிமிகு திருமலைக்கும் இடையே தன் அரச கூடாரங்களை அமைப்பான்: ஆயினும் உதவி செய்வார் யாருமின்றி அவன் தன் முடிவைக் காண்பான்.