1
மானிடா! நீ செங்கல் ஒன்றை எடுத்து, அதை உன் முன்னே வைத்து அதன் மேல் எருசலேம் நகரை வரைந்திடு.
2
அதைச் சுற்றி முற்றுகைமயிட்டாற்போல் அதற்கெதிராகத் கொத்தளங்கள் கட்டி, மணல்மேடு ஒன்றையும் எழுப்பு. அதற்கு எதிராகப் போர்ப் பாசறைகளை அமைத்து, சுற்றிலும் அரண்தகர் பொறிகளையும் வை.
3
மேலும் நீ இரும்புத்தட்டு ஒன்றை எடுத்து அதனை உனக்கும் நகருக்கும் இடையே ஓர் இரும்புச் சுவராக எழுப்பு. அதற்கு நேராக உன் முகத்தை வைத்துக்கொள். இப்பொழுது அது முற்றுகையின்கீழ் உள்ளது. முற்றுகையிடுபவன் நீயே: இது இஸ்ரயேல் வீட்டாருக்கு ஓர் அடையாளம்.
4
நீ உன் இடப்பக்கமாய்ப் படுத்து, உன்மேல் இஸ்ரயேல் வீட்டாரின் குற்றத்தைச் சுமத்திக் கொள். நீ அப்பக்கமாய்ப் படுத்திருக்கும் நாள்கள் வரை அவர்களின் குற்றத்தைச் சுமப்பாய்.
5
எத்தனை ஆண்டுகள் அவர்கள் தவறிழைத்தார்களோ, அத்தனை நாள்களை அதாவது முந்நூற்றுத் தொண்ணூறு நாள்களை உன்மேல் சுமத்தியுள்ளேன். இத்தனை நாள்கள் நீ இஸ்ரயேல் வீட்டாரின் குற்றத்தைச் சுமக்க வேண்டும்.