எசேக்கியேல் 37:1-14 - WCV
1
ஆண்டவரின் ஆற்றல் என் மீது இறங்கியது. அவர் என்னைத் தம் ஆவியால் தூக்கிக் கொண்டு போய்ப் பள்ளத்தாக்கின் நடுவில் நிறுத்தினார். அங்கே எலும்புகள் மிகுதியாய்க் கிடந்தன.
2
அவர் அவற்றைச் சுற்றி என்னை நடத்திச் சென்றார். அங்கே பள்ளத்தாக்கின் அடியில் மிகப் பல எலும்புகள் கிடந்தன. அவை மிகவும் உலர்ந்தவையாய் இருந்தன.
3
அவர் என்னிடம், “மானிடா! இந்த எலும்புகள் உயிர்பெறமுடியுமா?” என்று கேட்டார். நான், “தலைவராகிய ஆண்டவரே! உமக்குத் தெரியுமே” என்று மறுமொழி அளித்தேன்.
4
அவர் என்னிடம் உரைத்தது: நீ இந்த எலும்புகளுக்கு இறைவாக்குரை. “உலர்ந்த எலும்புகளே! ஆண்டவரின் வாக்கைக் கேளுங்கள்” என்று சொல்.
5
தலைவராகிய ஆண்டவர் இந்த எலும்புகளுக்கு இவ்வாறு கூறுகிறார்: நான் உங்களுக்குள் உயிர்மூச்சு புகச் செய்வேன். நீங்களும் உயிர் பெறுவீர்கள்.
6
நான் உங்களை நரம்புகளால் தொடுப்பேன்: உங்கள்மேல் சதையைப் பரப்புவேன். உங்களைத் தோலால் மூடுவேன். பின் உங்களுக்குள் உயிர்மூச்சு புகச் செய்வேன். நீங்களும் உயிர்பெறுவீர்கள். அப்போது நானே ஆண்டவர் என அறிந்து கொள்வீர்கள்.
7
எனவே, எனக்குக் கட்டளையிடப்பட்டபடி இறைவாக்குரைத்தேன். நான் இறைவாக்குரைக்கையில், உராயும் ஓசை கேட்டது. ஒவ்வொரு எலும்பும் தனக்குரிய எலும்புகளுடன் சேர்ந்து கொண்டது.
8
நான் பார்க்கையிலேயே அவற்றில் நரம்புகள் ஏற்பட்டு, சதை தோன்றித் தோல் அவற்றின்மேல் மூடியது. ஆனால் அவற்றில் உயிர் இன்னும் வரவில்லை.
9
பின்னர் அவர் என்னிடம், உயிர்மூச்சுக்கு இறைவாக்குரை: மானிடா! இறைவாக்குரைத்து, உயிர்மூச்சிடம் சொல். தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே: நான்கு காற்றுகளிலிருந்தும் “உயிர்மூச்சே வா, நீ வந்து கொலையுண்ட இவர்களுக்குள் புகு. அப்பொழுது இவர்கள் உயிர் பெறுவர்.”
10
எனவே அவர் எனக்குக் கட்டளையிட்டவாறு இறைவாக்குரைத்தேன். உடனே அவர்களுக்குள் உயிர்மூச்சு புகுந்தது. அவர்கள் உயிர்பெற்று, காலூன்றி, மாபெரும் படைத்திரள்போல் நின்றனர்.
11
அவர் மேலும் என்னிடம் கூறியது: மானிடா! இந்த எலும்புகள் இஸ்ரயேல் வீட்டார் அனைவரையும் குறிக்கும். அவர்களோ “எங்கள் எலும்புகள் உலர்ந்து போயின. எங்கள் நம்பிக்கை அற்றுப் போய்விட்டது. நாங்கள் துண்டிக்கப்பட்டு விட்டோம்” எனச் சொல்கிறார்கள்.
12
எனவே, இறைவாக்குரைத்து அவர்களிடம், சொல்: தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே: என் மக்களே! இதோ நான் உங்கள் கல்லறைகளைத் திறக்கப் போகிறேன். உங்களை உங்கள் கல்லறைகளினின்று மேலே கொண்டுவருவேன். உங்களுக்கு இஸ்ரயேல் நாட்டைத் திரும்பக் கொடுப்பேன்.
13
அப்போது, என் மக்களே! நான் உங்கள் கல்லறைகளைத் திறந்து உங்களை அவற்றிலிருந்து வெளிக்கொணர்கையில், நானே ஆண்டவர் என்பதை அறிந்து கொள்வீர்கள்.
14
என் ஆவியை உங்கள்மீது பொழிவேன். நீங்களும் உயிர் பெறுவீர்கள். நானும் உங்களை உங்கள் சொந்த நாட்டில் குடியமர்த்துவேன். “ஆண்டவராகிய நான் உரைத்தேன்: நானே இதைச் செய்தேன்” என அப்போது அறிந்து கொள்வீர்கள், என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.