22
எனவே இஸ்ரயேல் வீட்டாருக்குச் சொல்: தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே! இஸ்ரயேல் வீட்டாரே, நான் இவ்விதம் செயலாற்றுவது உங்களை முன்னிட்டு அல்ல. மாறாக, நீங்கள் சென்ற இடங்களில் வேற்றினத்தாரிடையே தீட்டுப்படுத்திய என் திருப்பெயரை முன்னிட்டே இவ்விதம் செயலாற்றுகிறேன்.
23
நீங்கள் வேற்றினத்தாரிடையே தீட்டுப்படுத்திய என் மாபெரும் பெயரை நான் புனிதப்படுத்துவேன். அப்போது உங்கள் வழியாய் அவர்கள் கண்முன்னே என் தூய்மையை நிலைநாட்டும்போது நானே ஆண்டவர் என்பதை அவர்கள் அறிந்து கொள்வார்கள் என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.
24
நான் உங்களை வேற்றினத்தாரிடமிருந்து அழைத்து, பல நாடுகளிடையே கூட்டிச் சேர்த்து, உங்கள் சொந்த நாட்டிற்குத் திரும்பக் கொணர்வேன்.
25
நான் தூய நீரை உங்கள்மேல் தெளிப்பேன். நீங்கள் உங்கள் எல்லா அழுக்கிலிருந்தும் துய்மையாவீர்கள்: உங்கள் எல்லாச் சிலைவழிபாட்டுத் தீட்டையும் அகற்றுவேன்.
26
நான் உங்களுக்குப் புதிய இதயத்தை அருள்வேன். புதிய ஆவியை உங்களுக்குள் புகுத்துவேன். உங்கள் உடலிலிருந்து கல்லாலான இதயத்தை எடுத்துவிட்டு, சதையாலான இதயத்தைப் பொருத்துவேன்.
27
என் ஆவியை உங்களுக்குள் புகுத்துவேன். என் நியமங்களைப் கடைப்பிடிக்கவும் என் நீதிநெறிகளைக் கவனமாய்ச் செயல்படுத்தவும் செய்வேன்.
28
நான் உங்கள் முன்னோருக்குக் கொடுத்த நாட்டில் நீங்கள் வாழ்வீர்கள். அப்போது என் மக்களாய் இருப்பீர்கள்: நான் உங்கள் கடவுளாய் இருப்பேன்.
29
உங்கள் எல்லாத் தீட்டிலிருந்தும் நான் உங்களை மீட்பேன். தானியம் முளைக்கச் செய்து அதை மிகுதியாய் விளையச் செய்வேன். உங்கள்மேல் பஞ்சம் வரவிடேன்.
30
நீங்கள் மக்களினங்களிடையே பஞ்சத்தால் இழிவுறாதபடி மரங்களின் கனிகளையும் வயல்களின் விளைச்சலையும் பெருக்குவேன்.
31
அப்போது நீங்கள் உங்கள் தீய வழிகளையும், தகாத செயல்களையும் எண்ணி உங்கள் பாவங்களுக்காகவும் உங்கள் அருவருப்பான செயல்களுக்காகவும் உங்களையே வெறுப்பீர்கள்.
32
உங்களை முன்னிட்டு நான் இவ்வாறு செய்யவில்லை: இது தெரிந்திருக்கட்டும், என்கிறார் தலைவராகிய ஆண்டவர். இஸ்ரயேல் வீட்டாரே! உங்கள் நடத்தைக்காக வெட்கி நாணமுறுங்கள்.
33
தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே: நான் உங்கள் எல்லாப் பாவங்களிலிருந்தும் உங்களைத் தூய்மைப்படுத்தும் நாளில், நகர்களில் உங்களை மீண்டும் குடியேற்றுவேன். அழிவிடங்களை மீண்டும் கட்டியெழுப்புவேன்.
34
பாழான நிலம், கடந்து செல்லும் அனைவர் கண்முன்னும், பாழாய்க் கிடப்பதற்குப் பதிலாகப் பயிர் செய்யப்படும்.
35
அப்போது மக்கள், “பாழாய்க் கிடந்த இந்த நிலம் ஏதேன் தோட்டம்போல் ஆகிவிட்டது. இடிந்து பாழாகிய அழிவிடங்களாய்க் கிடந்த நகர்கள் அரண்சூழ்ந்து”குடியேற்ற நகர்களாகிவிட்டனவே!” என்பர்.
36
அப்போது உங்களைச் சுற்றியுள்ள வேற்றினத்தார், ஆண்டவராகிய நான் அழிந்திருந்ததைக் கட்டியுள்ளேன் என்றும் பாழிடமாய் இருந்ததை விளை நிலமாக்கியுள்ளேன் என்றும் அறிந்துகொள்வர். ஆண்டவராகிய நான் இதை உரைத்தேன். நானே இதைச் செய்து முடிப்பேன்.
37
தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே: மேலும் இதனை நான் அவர்களுக்குச் செய்யும்படி இஸ்ரயேல் வீட்டார் என்னிடம் மன்றாடச் செய்வேன். அவர்களின் மக்களை மந்தை போல் பெருகச் செய்வேன்.
38
அவர்கள் விழா நாள்களில் பலிகளுக்காக எருசலேமுக்கு வரும் ஆடுகள்போல் நிறைய இருப்பர்: அழிந்துபோன நகர்கள் மக்கள் திரளால் நிரப்பப்பெறும். அப்போது, நானே ஆண்டவர் என அறிந்து கொள்வர்.