11
எனவே, என் மேல் ஆணை! நீ அவர்களுக்கு எதிராகக் காட்டிய பகைமைக்கும் சினத்திற்கும் பொறாமைக்கும் ஏற்ப, நான் உன்னை நடத்துவேன். நான் உன்னைத் தீர்ப்பிடும்போது, அவர்களிடையே என்னை அறியச் செய்வேன், என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.
12
அப்போது, நீ இஸ்ரயேலின் மலைகளுக்கு எதிராகச் சொன்ன எல்லா இழிசொற்களையும், ஆண்டவராகிய நான் கேட்டேன் என அறிந்து கொள்வாய். “அவை பாழாக்கப்பட்டுவிட்டன: இரையாகத் தரப்பட்டுள்ளன” என்று நீ சொன்னாய்.
13
நீ எனக்கெதிராய்ப் பெருமை பாராட்டி, உன் வாயினால் எனக்கெதிராய்க் கட்டுப்பாடற்ற சொற்களை உரைத்தாய். அவற்றை நான் கேட்டேன்.
14
எனவே, தலைவராகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: உலகு முழுவதும் மகிழ்வடையும்படி நான் உன்னைப் பாழாக்குவேன்.
15
இஸ்ரயேல் வீட்டாரின் உரிமைச் சொத்து பாழாக்கப்படுகையில் நீ மகிழ்வடைந்ததால் நானும், உனக்கு அவ்வாறே நடக்கச் செய்வேன். சேயிர் மலையும் ஏதோம் முழுவதும் பாழிடமாகும். அப்போது நானே ஆண்டவர் என்பதை அவர்கள் அறிந்துகொள்வர்.