23
எனவே, அவற்றிற்கு என் ஊழியன் தாவீதை ஒரே ஆயனாய் அமர்த்துவேன். அவன் அவற்றை மேய்த்து அவற்றிற்கு ஆயனாய் இருப்பான்.
24
ஆண்டவராகிய நான் அவர்கள் கடவுளாய் இருப்பேன். என் ஊழியன் தாவீது அவர்கள் நடுவே தலைவனாய் இருப்பான். ஆண்டவராகிய நானே இதை உரைத்தேன்.
25
சமாதான உடன்படிக்கையை அவர்களோடு செய்து கொள்வேன். காட்டு விலங்குகளை நாட்டினின்று வெளியேற்றுவேன். எனவே என் மந்தை திறந்த வெளியில் பாதுகாப்பாய் வாழ்ந்து காடுகளில் உறங்கும்.
26
அவர்களுக்குக் குன்றினைச் சுற்றிய இடங்களை ஆசியாகக் கொடுப்பேன். ஏற்ற காலத்தில் மழையை வரச் செய்வேன். அவர்கள் ஆசிமழையாக இருப்பர்.
27
வயல்வெளி மரங்கள் கனி கொடுக்கும். நிலமோ நல்விளைச்சல் நல்கும். அவர்கள் தங்கள் நாட்டில் பாதுகாப்பாய் இருப்பர். நான் அவர்களின் தளைகளைத் தகர்த்து, அடிமைப்படுத்தியவர் கையினின்று அவர்களை விடுவிக்கையில் நானே ஆண்டவர் என்பதை அறிந்துகொள்வர்.
28
இனிமேல் அவர்கள் மக்களுக்குக் கொள்ளைப் பொருளாய் இரார். நாட்டின் கொடிய விலங்குகளும் அவர்களை விழுங்க மாட்டா. அவர்கள் எத்தகைய அச்சுறுத்தலுமின்றிப் பாதுகாப்பாய் வாழ்வர்.
29
சிறப்புமிகு பண்ணை ஒன்று அவர்களுக்கு எழும்பச் செய்வேன். அவர்கள் இனி நாட்டில் பஞ்சத்தால் வாடமாட்டார்கள். மக்களினங்களின் இழி சொல்லையும் இனிச் சுமக்கமாட்டார்கள்.
30
அப்போது அவர்களுடைய கடவுளும் ஆண்டவருமாகிய நான் அவர்களோடு இருக்கிறேன் என்பதையும், இஸ்ரயேலின் வீட்டாராகிய அவர்கள் என் மக்களாக இருக்கிறார்கள் என்பதையும் அறிந்து கொள்வார்கள், என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.
31
நீங்கள் என் மேய்ச்சலின் மந்தையாகிய மக்கள், நான் உங்கள் கடவுள், என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.