எசேக்கியேல் 33:4-11 - WCV
4
எக்காளத்தின் ஒலியை எவராவது கேட்டும், எச்சரிப்புக்குச் செவிகொடாமல் இருக்க, வாள் வந்து அவர்களை வீழ்த்திச் சென்றால் அவர்கள் தம் இரத்தப்பழியைத் தாமே சுமப்பர்.
5
எக்காளத்தின் ஒலியைக் கேட்டிருந்தும் அவர்கள் அந்த எச்சரிப்பைப் பொருட்படுத்தவில்லை. எனவே, அவர்கள் தம் இரத்தப்பழியைத் தாமே சுமப்பர்.
6
ஆனால், அந்தக் காவலாளி வாள் வருவதைக் கண்டும் எக்காளம் ஊதாமல் இருந்து, அதன் மூலம் மக்கள் எச்சரிக்கைப்படாமல் இருக்கையில், வாள் வந்து அவர்களுள் எவரையாவது வீழ்த்தும்போது, அவர் தம் குற்றத்திலிருந்து வீழ்த்தப்பட்டிருப்பினும், அவரது இரத்தப்பழியை நான் காவலாளியின் மேல் சுமத்துவேன்.
7
அவ்வாறே, மானிடா! நான் உன்னை இஸ்ரயேல் வீட்டாருக்கும் காவலாளியாக ஏற்படுத்தியுள்ளேன். என் வாயினின்று வரும் வாக்கைக் கேட்கும்போதெல்லாம் நீ என் பொருட்டு அவர்களை எச்சரிக்கைவேண்டும்.
8
தீயோரிடம் நான், “ஓ தீயோரே! நீங்கள் உறுதியாகச் சாவீர்கள்” என்று சொல்ல, அத்தீயோர் தம் வழியிலிருந்து திரும்பும்படி நீ அவர்களை எச்சரிக்காவிடில், அத்தீயோர் தம் குற்றத்திலேயே சாவர்: ஆனால், அவர்களது இரத்தப்பழியை உன் மேலேயே சுமத்துவேன்.
9
ஆனால் தீயோரை அவர்கள் தம் வழியிலிருந்து திரும்ப வேண்டுமென்று நீ எச்சரித்தும் அவர்கள் தம் வழியிலிருந்து திரும்பாவிட்டால், அவர்கள் தம் குற்றத்திலேயே சாவர். நீயோ, உன் உயிரைக் காத்துக் கொள்வாய்.
10
நீயோ, மானிடா! இஸ்ரயேல் வீட்டாரிடம் சொல்: நீங்கள் சொல்கிறீர்கள்: “எங்கள் குற்றங்களும் பாவங்களும் எங்கள்மேல் இருப்பதால் நாங்கள் உருகிப்போகிறோம். எப்படி நாங்கள் வாழமுடியும்?”
11
அவர்களிடம் சொல்: “தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே: என் மேல் ஆணை! தீயோர் சாகவேண்டுமென்பது என் விருப்பம் அன்று: ஆனால், அத்தீயோர் தம் வழிகளினின்று திரும்பி, வாழ வேண்டும் என்பதே என் விருப்பம். ஆகவே உங்கள் தீய வழிகளினின்று திரும்புங்கள். இஸ்ரயேல் வீட்டாரே! நீங்கள் ஏன் சாகவேண்டும்?