2
மானிடா! உன் மக்களிடம் பேசி, அவர்களுக்குச் சொல்: ஒரு நாட்டின்மேல் நான் வாளைக் கொணரும்போது, அந்நாட்டின் மக்கள் தங்கள் நடுவிலிருந்து ஒரு மனிதனைத் தேர்ந்தெடுத்து அவனைத் தங்கள் காவலாளியாக ஆக்கியிருக்க,
3
அவன் அந்நாட்டின்மேல் வாள் வருவதைக் கண்டு எக்காளம் ஊதி மக்களை எச்சரிக்கை செய்யும்போது,
4
எக்காளத்தின் ஒலியை எவராவது கேட்டும், எச்சரிப்புக்குச் செவிகொடாமல் இருக்க, வாள் வந்து அவர்களை வீழ்த்திச் சென்றால் அவர்கள் தம் இரத்தப்பழியைத் தாமே சுமப்பர்.
5
எக்காளத்தின் ஒலியைக் கேட்டிருந்தும் அவர்கள் அந்த எச்சரிப்பைப் பொருட்படுத்தவில்லை. எனவே, அவர்கள் தம் இரத்தப்பழியைத் தாமே சுமப்பர்.
6
ஆனால், அந்தக் காவலாளி வாள் வருவதைக் கண்டும் எக்காளம் ஊதாமல் இருந்து, அதன் மூலம் மக்கள் எச்சரிக்கைப்படாமல் இருக்கையில், வாள் வந்து அவர்களுள் எவரையாவது வீழ்த்தும்போது, அவர் தம் குற்றத்திலிருந்து வீழ்த்தப்பட்டிருப்பினும், அவரது இரத்தப்பழியை நான் காவலாளியின் மேல் சுமத்துவேன்.
7
அவ்வாறே, மானிடா! நான் உன்னை இஸ்ரயேல் வீட்டாருக்கும் காவலாளியாக ஏற்படுத்தியுள்ளேன். என் வாயினின்று வரும் வாக்கைக் கேட்கும்போதெல்லாம் நீ என் பொருட்டு அவர்களை எச்சரிக்கைவேண்டும்.
8
தீயோரிடம் நான், “ஓ தீயோரே! நீங்கள் உறுதியாகச் சாவீர்கள்” என்று சொல்ல, அத்தீயோர் தம் வழியிலிருந்து திரும்பும்படி நீ அவர்களை எச்சரிக்காவிடில், அத்தீயோர் தம் குற்றத்திலேயே சாவர்: ஆனால், அவர்களது இரத்தப்பழியை உன் மேலேயே சுமத்துவேன்.
9
ஆனால் தீயோரை அவர்கள் தம் வழியிலிருந்து திரும்ப வேண்டுமென்று நீ எச்சரித்தும் அவர்கள் தம் வழியிலிருந்து திரும்பாவிட்டால், அவர்கள் தம் குற்றத்திலேயே சாவர். நீயோ, உன் உயிரைக் காத்துக் கொள்வாய்.