19
“அழகில் நீ யாரைவிட மிகுந்தவள்? நீ கீழிறங்கி, விருத்தசேதனம் இல்லாரோடு கிட.”
20
வாளால் கொல்லப்படுவோரோடு எகிப்தின் மக்கள் வீழ்வர். இதோ! ஒரு வாள் அவர்களைக் கொல்ல உருவப்பட்டுள்ளது.
21
போரில் வலிமைமிக்கோர் பாதாளத்தின் நடுவினின்று எகிப்தியரையும் துணையாளரையும் குறித்து “விருத்தசேதனமில்லார் வாளால் வெட்டுண்டுவர்களுடன் கிடக்கின்றனரே” என்பர்.
22
அதோ அசீரியா கிடக்கின்றாள்! அவளுடன் அவளுடைய மக்கள் கூட்டமைப்பினர் அனைவரும் கிடக்கின்றனர். அவர்கள் அனைவரும் வாளால் வெட்டுண்டு வீழ்ந்தவர்களே. அவளைச் சுற்றி கல்லறைகள் கிடக்கின்றன.
23
அவர்களின் கல்லறைகள் படுகுழியின் ஆழத்தில் அமைந்துள்ளன: அவளுடைய மக்கள் அவளின் கல்லறையைச் சுற்றிக் கிடக்கின்றனர். அவர்கள் அனைவருமே வாளால் வெட்டுண்டு வீழ்ந்தவர்களே: வாழ்வோரின் நாட்டில் அச்சத்தை உண்டாக்கியவர்கள்.
24
அதோ, ஏலாம் கிடக்கின்றாள்! அவளுடைய கல்லறையைச் சுற்றிலும் அவளுடைய மக்கள் கூட்டத்தார் கிடக்கின்றனர். அவர்கள் அனைவரும் வாளால் வெட்டுண்டு வீழ்ந்தவர்கள்: விருத்தசேதனமில்லாமல் கீழுலகுக்குள் சென்றவர்கள்: வாழ்வோரின் நாட்டில் அச்சத்தை உண்டாக்கியவர்கள். படுகுழிக்குள் செல்வோருடன் சேர்ந்து அவர்களும் தங்கள் மானக்கேட்டைச் சுமக்கின்றார்கள்.
25
வெட்டுண்டோர் நடுவே அவளுடைய படுக்கையை அமைந்துள்ளது. அவளுடைய மக்கள் திரள் அவளின் கல்லறையைச் சுற்றிக் கிடக்கின்றன: அவர்கள் அனைவரும் விருத்தசேதனமில்லார்: வாளால் வெட்டுண்டவர்கள்: வாழ்வோரின் நாட்டில் அச்சத்தை உண்டாக்கியவர்கள். அவர்கள் படுகுழிக்குச் செல்வோருடன் சேர்ந்து தங்கள் மானக்கேட்டைச் சுமந்து வெட்டுண்டவர்களின் நடுவிலே கிடக்கின்றார்கள்.
26
அதோ! மெசேக்கும் தூபாலும் கிடக்கின்றனர்! அவர்களின் மக்கள் கூட்டத்தார் அவர்களின் கல்லறைகளைச் சுற்றிக் கிடக்கின்றனர். அவர்கள் அனைவரும் விருத்தசேதனமில்லாதவர்கள்: வாளால் வெட்டுண்டவர்கள்: வாழ்வோரின் நாட்டில் அச்சத்தை உண்டாக்கியவர்கள்.
27
தங்கள் போர்க் கருவிகளுடன் பாதாளத்தில் இறங்கித் தங்கள் வாள்களைத் தங்கள் தலைகளுக்கு அடியிலும், தங்கள் கேடயங்களைத் தங்கள் எலும்புகள் மேலும் வைத்துக்கொண்டு இறந்துபோன பழங்கால வீரருடன் அவர்கள் கிடக்கவில்லை: ஏனெனில் அந்த வீரரைக் குறித்த அச்சம் வாழ்வோரின் நாட்டில் பரவி இருந்தது.
28
எனவே, நீங்கள் நொறுக்கப்பட்டு, விருத்தசேதனமில்லார் நடுவில் வாளால் வெட்டுண்டவர்களோடு கிடப்பீர்கள்.
29
அதோ ஏதோமும் அவளுடைய மன்னர்களும், முதன்மைத் தலைவர்களும் கிடக்கின்றார்கள்! அவர்கள் எத்துணை வலிமை உடையவர்களாயிருந்தும்”வாளால் வெட்டுண்டவர்களோடு, விருத்தசேதனமில்லாது, படுகுழிக்குச் செல்வோருடன் கிடக்கின்றார்கள்.
30
அதோ, வடநாட்டுத் தலைவர்கள் அனைவரும், எல்லாச் சீதோனியரும் கிடக்கின்றார்கள்: அவர்கள், வலிமையால் எவ்வளவோ அச்சம் விளைவத்தவர்களாயிருந்தும் மானக்கேட்டுக்கு உள்ளாகி, வெட்டுண்டவர்களோடு கீழே சென்றுள்ளார்கள். விருத்தசேதனமின்றி வாளால் வெட்டுண்டவர்களோடு அவர்கள் கிடக்கின்றார்கள்: படுகுழிக்குச் செல்வாரோடு தங்கள் மானக் கேட்டைச் சுமக்கின்றார்கள்.
31
பார்வோனும் அவனுடைய படைத்திரளும் அவர்களைப் பார்த்து, வாளால் வெட்டுண்ட தம் மக்கள் கூட்டம் அனைத்துக்காகவும் தம்மைத் தேற்றிக்கொள்வர், என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.
32
வாழ்வோரின் நாட்டில் அவன் அச்சத்தைப் பரவச் செய்ததால், பார்வோனும் அவனுடைய மக்கள் கூட்டத்தார் அனைவரும் விருத்தசேதனமில்லாது வாளால் வெட்டுண்டவர்களுடன் கிடப்பர், என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.