14
அப்போது ஆவி என்னைத் தூக்கிக் கொண்டு சென்றது. நானோ மனம் கசந்து, சினமுற்றுச் சென்றேன். ஆனால், ஆண்டவரது ஆற்றல்மிகு கைவன்மை என்மேல் இருந்தது.
15
பின்னர், நான் கெபார் ஆற்றோரம் தெல் ஆபீபில் இருந்த நாடு கடத்தப்பட்டோரிடம் வந்தேன். அவர்கள் குடியிருந்த இடத்தில் அதிர்ச்சியுற்றவனாய் அவர்களிடையே ஏழு நாள்கள் தங்கியிருந்தேன்.
16
ஏழு நாள்களுக்குப்பின் ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது.
17
மானிடா! நான் உன்னை இஸ்ரயேல் வீட்டாருக்குக் காவலனாக நியமித்துள்ளேன். என் வாயின் சொற்களைக் கேட்டு அவர்களை என் பெயரால் எச்சரிக்கை செய்.
18
தீயோரிடம் “நீங்கள் சாவது உறுதி” என்று நான் சொல்ல, நீ அவர்களை எச்சரிக்காவிடில்-அத்தீயோர் தம் தீயவழியினின்று விலகாவிட்டால், தம் உயிரை அவர்களால் காத்துக்கொள்ள இயலாது என்று அவர்களை எச்சரிக்காவிட்டால்-அவர்கள் தம் குற்றப்பழியோடு சாவர். ஆனால் அவர்களது இரத்தப் பழியை உன் மேலேயே சுமத்துவேன்.
19
மாறாக, நீ தீயோரை எச்சரித்திருத்தும், அவர்கள் தம் தீச்செயலினின்றும் தம் தீய வழியினின்றும் விலகாமல் இருந்தால், அவர்கள் தம் குற்றப் பழியோடு சாவர். நீயோ உன் உயிரைக் காத்துக் கொள்வாய்.