22
ஆகவே ஒகலிபா! தலைவராகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: நான் உன் காதலர்களை உனக்கு எதிராய்க் கிளம்பச் செய்வேன். இவர்களிடமிருந்து நீ வெறுப்பினால் விலகிக்கொண்டாய். அவர்களை உனக்கு எதிராய் எத்திசையிலிருந்தும் கொண்டு வருவேன்.
23
பாபிலோனியர் கல்தேயர் யாவரையும், பெக்கோது, சோவா, கோகா எனும் இடத்தாரையும், அசீரியரையும் வரச்செய்வேன். அவர்கள் அழகிய இளைஞரையும் ஆளுநர்களாயும் படைத்தலைவர்களாயும் தேர்ப்படை வீரர்களாயும் உள்ளனர். அவர்கள் யாவரும் குதிரையேற்றத்தில் தேர்ச்சி பெற்றவர்.
24
அவர்கள் உனக்கு எதிராய்ப் படைக்கலம் தாங்கி வருவர். தேர்கள், குதிரை வண்டிகள், திரளான மக்கள் ஆகியோருடன் பெரிய கேடயங்களோடும், சிறிய கேடயங்களோடும் தலைச்சீராவோடும் வந்து உனக்கு எதிராய் நாற்புறமும் உன்னைச் சூழந்துகொள்வர். நான் உன்னைத் தண்டிக்குமாறு அவர்களிடம் ஒப்புவிப்பேன். அவர்களும் தங்கள் முறைப்படி உன்னைத் தண்டிப்பார்கள்.
25
நான் என் பெருஞ்சினத்தை உனக்கு எதிராய்த் திருப்புவேன். அவர்களும் உன்னைக் கடுஞ்சினத்துடன் நடத்துவர். அவர்கள் உன் மூக்கையும் காதுகளையும் வெட்டி எறிவர். எஞ்சியோர் வாளால் வீழ்வர். அவர்கள் உன் ஆண்மக்களையும் பெண்மக்களையும் கவர்ந்து செல்வர். எஞ்சியோர் விழுங்கப்படுவர்.