எசேக்கியேல் 22:24-30 - WCV
24
“மானிடா! அந்த நாட்டுக்குச் சொல்: நீ தூய்மைப்படுத்தப் பெறாத நாடு. ஏனெனில் என் சினத்தின் நாள்களில் உன்னில் மழை பெய்யவில்லை.
25
அவளின் போலி இறைவாக்கினர் சதித்திட்டம் தீட்டி இரையைக் கிழிக்கும் கர்ச்சிக்கின்ற சிங்கம் போல் மக்களை விழுங்குகிறார்கள். அவர்கள் விலையுயர்ந்த கருவூலத்தையும் பொருள்களையும் எடுத்துச் செல்கின்றனர். கைம்பெண்களை நகரிடையே மிகுதியாக்குகின்றனர்.
26
அவளின் குருக்கள் என் திருச்சட்டத்தை மீறுகின்றனர். எனக்குரிய தூய்மையானவற்றைத் தீட்டுப்படுத்துகின்றனர். தூய்மையானவற்றிற்கும் பொதுவானவற்றிற்கும் வேற்றுமைபாராமலும், தீட்டானவற்றையும் தீட்டற்றவற்றையும் பிரித்துணராமலும் இருக்கின்றனர். ஓய்வு நாளைக் கடைப்பிடிப்பது பற்றிக் கவலையற்றிருந்தனர். நானோ அவர்களால் அவமதிப்புக்குள்ளானேன்.
27
அவளின் தலைவர்கள் இரையைக் கிழிக்கும் ஓநாய்கள்போல் உள்ளனர். அநீதியாய்ச் செல்வம் ஈட்ட மக்களைக் கொலை செய்து குருதி சிந்துகின்றனர்.
28
அவளின் போலி இறைவாக்கினர் இச்செயல்களைப் பொய்க்காட்சிகள் மூலமும், பொய்க்குறிகள் மூலமும் வெள்ளையடித்து மூடி மறைக்கிறார்கள். ஆண்டவர் சொல்லாதபோதே “தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே” என்கிறார்கள்.
29
நாட்டின் பொதுமக்கள் பிறர்பொருளைப் பறிக்கின்றனர்: கொள்ளையடிக்கின்றனர். ஏழைகளையும் எளியவர்களையும் துன்புறுத்தி, அன்னியரை இழிவாய் நடத்தி, நீதி வழங்க மறுக்கின்றனர்.
30
எனக்கும் இந்நாட்டு மக்களுக்குமிடையே ஒரு சுவரை எழுப்பி, அதன் மூலம் நான் இந்த நாட்டு மக்களை அழிக்காதபடி தடுப்பவன் ஒருவனை அவர்களிடையே தேடினேன். ஆயினும் யாரும் கிட்டவில்லை.