எசேக்கியேல் 22:2-15 - WCV
2
“மானிடா! அவளுக்குத் தீர்ப்பிட மாட்டாயா? குருதியைச் சிந்திய இந்நகருக்கு நீ தீர்ப்பிட மாட்டாயா? அவ்வாறெனில், அவளின் எல்லா அருவருப்புகளையும் எடுத்துக்கூறு.”
3
நீ சொல்: தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே: தனக்குத் தண்டனை நாள் வரும்படித் தன் நடுவில் குருதியைச் சிந்தித் தனக்கெனச் சிலைகளைச் செய்து தீட்டுப்படுத்திக் கொண்ட நகர் இதுவே!
4
நீ சிந்திய குருதியினால் குற்றப்பழிக்கு ஆளானாய். நீ வடித்த தெய்வச் சிலைகளால் தீட்டுப்பட்டவளானாய். நீ உன் நாள்களை முடித்து விட்டாய். உன் ஆண்டுகளை முடிவுக்குக் கொணர்ந்து விட்டாய். ஆகவே உன்னை வேற்றினத்தாருக்கு இழி பொருளாகவும், எல்லா நாட்டினருக்கும் ஏளனப் பொருளாகவும் ஆக்குவேன்.
5
உன் அருகில் உள்ளோரும் தொலைவில் உள்ளோரும் உன்னைப் பேர்கெட்ட நகர் எனவும் அமளி நிறைந்தவள் எனவும் இகழ்வர்.
6
உன்னிடத்திலுள்ள இஸ்ரயேலின் தலைவர்கள் தங்கள் வலிமையால் குருதி சிந்துகிறார்கள்:
7
உன்னிடையே தாய் தந்தையரை அவமதித்தார்கள்: அன்னியரைத் துன்புறுத்தித் தந்தையற்றோதரையும் கைம்பெண்களையும் இழிவாய் நடத்தினார்கள்.
8
நீயோ எனக்குரிய தூய்மையானவற்றை அவமதித்து, ஓய்வுநாள்களைத் தீட்டுப்படுத்தினாய்.
9
புறங்கூறிக் கொலை செய்வோர் உன்னிடம் உள்ளனர். அவர்கள் மலைகளின்மேல் படைக்கப்பட்டதை உண்கின்றனர். உன்னிடையே முறைகேடானதைச் செய்கின்றனர்.
10
தங்கள் தந்தையின் திறந்த மேனியை வெளிப்படுத்துகிறவர்களும் தீட்டான காலத்தில் பெண்களைப் பலவந்தப் படுத்துகிறவர்களும் உன்னிடையே உள்ளனர்.
11
ஒருவன் அடுத்திருப்பவன் மனைவியுடன் முறைதவறி நடக்கிறான். இன்னொருவன் வெட்கமின்றித் தன் மருமகளைக் கெடுக்கிறான். வேறொருவன் தன் தந்தைக்குப் பிறந்த தன் சகோதரியையே பலவந்தப்படுத்துகிறான்.
12
உன்னிடையே பலர் குருதி சிந்தக் கையூட்டுப் பெறுகின்றனர். நீ வட்டி வாங்குகிறாய், கொடுத்ததற்கு மேலாய்ப் பிடுங்கி, அடுத்திருப்பவனை ஒடுக்குகிறாய். நீ என்னை மறந்துவிட்டாய், என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.
13
உன் நீதியற்ற வருமானத்தை முன்னிட்டும் நீ உன்னிடையே சிந்திய இரத்தத்தை முன்னிட்டும் நான் என் கைகளைத் தட்டுவேன்.
14
நான் உன்னைத் தண்டிக்கும் நாளில் உன் மனவுறுதி நிலைத்திருக்குமா? அல்லது உன் கைகள் வலிமையுடன் விளங்கிடுமா? ஆண்டவராகிய நானே இதைச் சொல்கிறேன். நான் இதைச் செய்தே தீர்வேன்.
15
உன்னை வேற்றினத்தாரிடையே சிதறடிப்பேன்: நாடுகளிடையே கலந்தொழியச் செய்வேன்: உன் அருவருப்புக்கு ஒரு முடிவு கட்டுவேன்.