6
நான் அவர்களை எகிப்து நாட்டினின்றும் வெளிக் கொணர்ந்து, நான் அவர்களுக்காகத் தோந்தெடுத்ததும், பாலும் தேனும் வழிந்தோடுவதும், எல்லா நாடுகளிலும் பெருமைமிக்கதுமான நாடுக்கு அவர்களை அழைத்துச் செல்வேன் என்றும் அவர்களிடம் ஆணையிட்டுக் கூறினேன்.
7
மேலும், அவர்களைப் பார்த்து, “ஒவ்வொருவரும் தம் கண்களுக்கு விருந்தளிக்கும் அருவருப்பானவற்றை விட்டெறியட்டும். எகிப்தின் தெய்வச் சிலைகளால் உங்களையே தீட்டுப்படுத்திக் கொள்ளாதீர்கள்: நானே உங்கள் கடவுளாகிய ஆண்டவர்,” என்று சொன்னேன்.
8
அவர்களோ, எனக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்தனர். எனக்குச் செவி சாய்க்க மறுத்தனர். அவர்களின் கண்களுக்கு விருந்தளித்த அருவருப்பானவற்றை எவனும் விட்டெறியவில்லை: எகிப்தின் தெய்வச் சிலைகளை ஒதுக்கிவிடவுமில்லை. ஆகையால் எகிப்து நாட்டின் நடுவில் என் ஆத்திரத்தை அவர்கள்மேல் கொட்டி, என் சினத்தைத் தீர்த்துக் கொள்வேன் என்று நான் கூறினேன்.
9
ஆயினும் அவர்களைச் சூழ்ந்திருந்த வேற்றினத்தார் முன்னிலையில் என் பெயர் மாசுறாதபடி நான் நடந்து கொண்டேன். இவ்வேற்றினத்தாரின் கண்முன் அன்றோ நான் அவர்களை எகிப்து நாட்டினின்று வெளிக்கொணர்ந்து, என்னை அவர்களுக்கு வெளிப்படுத்தினேன்.
10
ஆக, நான் அவர்களை எகிப்து நாட்டினின்று புறப்படச் செய்து, பாலைநிலத்துக்குக் கூட்டி வந்து,
11
வாழ்வளிக்கும் என் நியமங்களை அவர்களுக்குக் கொடுத்து, வாழ்வுதரும் என் நீதிநெறிகளை அவர்களுக்கு வெளிப்படுத்தினேன். அவற்றைக் கடைப்பிடிப்போர் வாழ்வு பெறுவர்.
12
மேலும், அவர்களைப் புனிதப்படுத்தும் ஆண்டவர் நானே என்பதை அவர்கள் அறிந்து கொள்ளும்படி, என் ஓய்வு நாள்களை எனக்கும் அவர்களுக்குமிடையே ஓர் அடையாளமாகத் தந்தருளினேன்.