எசேக்கியேல் 17:15-21 - WCV
15
அந்த அரச மரபினன் அவனுக்கெதிராகக் கிளர்ந்து குதிரைகளையும் திரளான படையையும் தனக்குக் கொடுக்க வேண்டுமென்று எகிப்துக்குத் தூதர்களை அனுப்பினான். இவன் வெற்றி பெறமுடியுமா? இவன் தப்ப இயலுமா? உடன்படிக்கையை முறிக்கும் இத்தகையவன் தப்பவே முடியாது.
16
தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே: என் மேல் ஆணை! தன்னை அரசனாக்கிய மாமன்னனுக்கு அளித்த வாக்குறுதியைப் புறக்கணித்து, அவனுடன் செய்த உடன்படிக்கையை முறித்த இவன், பாபிலோன் நகருக்குள்ளேயே சாவான்.
17
மண்மேடு எழுப்பப்பட்டுக் கொத்தளம் கட்டப்பட்டு பலர் வீழ்த்தப்பட இருக்கும் நிலையில் பெரிய படையும் திரளான வீரரும் கொண்ட பார்வோன் இவனுக்குத் துணை செய்ய வரப்போவதில்லை.
18
உடன்படிக்கையை முறிப்பதற்காக வாக்குறுதியை இவன் புறக்கணித்துள்ளான்: கைமேல் அடித்து வாக்களித்திருந்தும் இவ்வாறு செய்துள்ளான். இவன் தப்பவே முடியாது.
19
எனவே தலைவராகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: என்மேல் ஆணை! எனக்களித்திருந்த வாக்குறுதியை அவன் புறக்கணித்ததையும் என் உடன்படிக்கையை முறித்ததையும் அவன் தலை மேலேயே சுமத்துவேன்.
20
நான் என் வலையை அவன்மீது வீச, அவன் என் கண்ணியில் சிக்குவான். நான் அவனைப் பாபிலோனுக்குக் கொண்டு வந்து, எனக்கெதிராய் அவன் செய்த துரோகத்துக்காக அங்கே அவனுக்குத் தீர்ப்பு வழங்குவேன்.
21
அவனுடைய படைவீரர்களுள் அவனுடன் தப்பியோடிவரும் யாவரும் வாளால் வீழ்வர். எஞ்சியோர் எத்திக்கிலும் சிதறடிக்கப்படுவர். அப்போது இதை உரைத்தது ஆண்டவராகிய நானே என்பதை நீங்கள் அறிந்து கொள்வீர்கள்.