6
அவ்வழியாய்க் கடந்துபோன நான் உன்னருகில் வந்து உன் இரத்தத்தில் நீ புரள்வதைக் கண்டு, இரத்தத்தில் கிடந்த உன்னை நோக்கி, “வாழ்ந்திடு” என்றேன். ஆம், இரத்தத்தில் கிடந்த உன்னை நோக்கி, “வாழ்ந்திடு” என்றேன்.
7
உன்னை வயல் வெளியில் வளரும் பயிர்போல் உருவாக்கினேன். நீ வளர்ந்து பருவமெய்தி அழகிய மங்கையானாய். உன் கொங்கைகள் உருப்பெற்றன: உன் கூந்தலும் நீண்டு வளர்ந்தது: ஆயினும் நீ ஆடையின்றித் திறந்த மேனியளாய் நின்றாய்.
8
அவ்வழியாய்க் கடந்துபோன நான் உன்னை நோக்கினேன். அப்போது நீ காதற் பருவத்தில் இருந்தாய். நான் என் ஆடையை உன்மேல் விரித்து உன் திறந்தமேனியை மூடினேன். உனக்கு உறுதிமொழி தந்து, உன்னோடு உடன்படிக்கை செய்தேன். நீயும் என்னுடையவள் ஆனாய், என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.
9
நான் உன்னை நீராட்டி, உன் மேலிருந்த இரத்தத்தைக் கழுவித் துடைத்து, உனக்கு எண்ணெய் பூசினேன்.
10
பூப்பின்னல் உடையால் உன்னை உடுத்தி, தோல் காலணிகளை உனக்கு மாட்டி, மெல்லிய துகிலை உனக்கு அணிவித்து, நார்ப்பட்டால் உன்னைப் போர்த்தினேன்.
11
அணிகலன்களால் உன்னை அழகு செய்தேன்: கைகளுக்குக் காப்புகளும் கழுத்திற்குச் சங்கிலியும் இட்டேன்.
12
மூக்குக்கு மூக்குத்தியும், காதுகளுக்குத் தோடுகளும், தலையில் அழகிய மணிமுடியும் அணிவித்தேன்.
13
பொன்னாலும், வெள்ளியாலும், நீ அணிசெய்யப்பட்டாய். நார்ப்பட்டும் மெல்லிய துகிலும், பூப்பின்னல் ஆடையும் உன் உடைகள் ஆயின. மாவும், தேனும், எண்ணெயும் உன் உணவாயின. நீ மிக மிக அழகு வாய்ந்தவளாகி, அரச தகுதி பெற்றாய்.
14
உன் அழகின் காரணமாக உன் புகழ் வேற்றினத்தாரிடையே பரவிற்று. என் மாட்சி உன்மேல்பட உன் அழகு நிறைவுற்று விளங்கிற்று, என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.