எசேக்கியேல் 14:4-10 - WCV
4
ஆகையால், நீ அவர்களோடு பேசி, அவர்களிடம் சொல்: தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே: இஸ்ரயேல் வீட்டாருள் எவராவது சிலைகளிடம் தங்கள் மனத்தைப் பறி கொடுத்து அவற்றைத் தங்கள்முன் எழுப்பும் தீச்செயலில் ஈடுபட்டுக் கொண்டே, இறைவாக்கினரிடம் வந்தால், அவர்களுக்கு ஆண்டவராகிய நானே அவர்களின் எண்ணற்ற சிலைகளுக்கேற்ப பதில் அளிப்பேன்!
5
இவ்வாறு, சிலைகளால் என்னை விட்டு விலகிப்போயிருக்கும் இஸ்ரயேல் வீட்டாரின் இதயங்கள் அனைத்தையும் நான் என் வயமாக்கிக்கொள்வேன்.
6
ஆகவே, இஸ்ரயேல் வீட்டாருக்குச் சொல்: தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே: திரும்புங்கள், உங்கள் சிலைகளை விட்டுத் திரும்புங்கள்: உங்கள் அருவருப்புகள் அனைத்தையும் விட்டு உங்கள் முகத்தைத் திருப்புங்கள்.
7
ஏனெனில், இஸ்ரயேல் வீட்டாருள் எவராவது, இஸ்ரயேல் வீட்டில் வாழும் அயலாருள் எவராவது என்னைவிட்டகன்று, தங்கள் சிலைகளிடம் மனத்தைப் பறிகொடுத்து அவற்றைத் தங்கள் முன் எழுப்பும் தீச்செயலில் ஈடுபட்டுக்கொண்டே இறைவாக்கினரிடம் வந்து, அவர் வழியாக என் திருவுளத்தை அறிய முற்பட்டால், அவர்களுக்கு நானே, ஆண்டவராகிய நானே சரியான பதில் அளிப்பேன்!
8
அவர்களுக்கெதிராக என் முகத்தைத் திருப்பி, அவர்களை அடையாளமாகவும் பழிச் சொல்லாகவும் ஆக்குவேன். அவர்களை என் மக்கள் நடுவிலிருந்து வெட்டியெறிவேன். அப்போது, நானே ஆண்டவர் என நீங்கள் அறிந்துகொள்வீர்கள்.
9
இறைவாக்கினன் ஒருவன் ஏமாற்றப்பட்டு ஒரு வாக்கை உரைப்பானாகில், ஆண்டவராகிய நானே அவனை ஏமாற்றினேன். நான் என் கையை அவனுக்கு எதிராக நீட்டி என் மக்கள் இஸ்ரயேலின் நடுவிலிருந்து அவனை அழித்து விடுவேன்.
10
என் திருவுளத்தை அறிய முற்படுவோரின் குற்றப்பழியைப் போலவே இறைவாக்கினனின் குற்றப்பழியும் இருக்கும். அவரவர்கள் தங்கள் குற்றப்பழியைச் சுமப்பார்கள்.