எசேக்கியேல் 14:13-21 - WCV
13
மானிடா! ஒரு நாடு நம்பிக்கைத் துரோகம் இழைத்து எனக்கு எதிராகப் பாவம் செய்தால், நான் கையை நீட்டி, உணவின் தரவை நிறுத்தி, அங்குப் பஞ்சத்தை அனுப்பி, அங்குள்ள மனிதரையும் கால்நடைகளையும் அழிப்பேன்.
14
அப்போது நோவா, தானியேல், யோபு ஆகிய இம்மூவரும் அங்கிருந்தால், அவர்கள் தங்கள் நேர்மையால் தங்கள் உயிரைமட்டுமே காத்துக்கொள்வர், என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.
15
நான் காட்டு விலங்களை நாடு முழுவதும் அலைந்து திரியவிட, அவை அதனைப் பாழாக்கி வெறுமையாக்கும். அவற்றின் காரணமாய் யாரும் அங்கே நடமாட முடியாதிருக்கும்.
16
அப்போது, இம்மூவரும் அங்கே இருந்தால்-என்மேல் ஆணை-அவர்கள் மட்டுமே காப்பாற்றப்படுவர். தங்கள் புதல்வர்களையோ, புதல்வியரையோ காப்பாற்ற அவர்களால் முடியாமற் போகும்: நாடும் பாழாய்ப்போகும், என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.
17
அல்லது, நான் அந்த நாட்டின்மீது வாளை வரச்செய்து, “வாள் நாட்டை ஊடுருவட்டும்” என ஆணையிட்டு மனிதரையும், கால்நடைகளையும் வெட்டி வீழ்த்துவேன்.
18
அப்போது, இம்மூவரும் அங்கே இருந்தால்-என்மேல் ஆணை-அவர்கள்மட்டுமே காப்பாற்றப்படுவர்: தங்கள் புதல்வர்களையோ, புதல்வியரையோ காப்பாற்ற அவர்களால் முடியாமற் போகும், என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.
19
அல்லது, நான் அந்நாட்டினுள் கொள்ளை நோயை அனுப்பி, அதனின்று மனிதரையும் கால்நடைகளையும் அழிப்பதற்காக, என் சீற்றத்தைக் குருதியாய் அதன்மீது கொட்டுவேன்.
20
அப்போது, நோவா, தானியேல், யோபு ஆகியோர் அங்கிருந்தால்-என்மேல் ஆணை-மகனையோ மகளையோ காப்பாற்ற அவர்களால் முடியாமற்போகும். தங்கள் நேர்மையின் பொருட்டுத் தங்கள் உயிரை மட்டுமே காத்துக்கொள்வர், என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.
21
ஆகவே, தலைவராகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: உண்மையிலேயே நான் மனிதரையும் கால்நடைகளையும் எருசலேமினின்று ஒழிப்பதற்காக, வாள், பஞ்சம், காட்டுவிலங்கு, கொள்ளைநோய் ஆகிய என்னுடைய நான்கு கடும் தீர்ப்புகளையும் அதன்மீது அனுப்புவேன்.