3
மானிடா! நீயோ நாடுகடத்தப்படும் ஒருவர் போல் பொருள்களைத் தயார் செய்து கொண்டு, அவர்கள் கண்ணெதிரே பகல் நேரத்தில் புறப்படு. உன் உறைவிடத்திலிருந்து வேறோர் இடத்திற்கு, அவர்கள் கண்ணெதிரே, நாடுகடத்தப்படுபவர் போல் வெளியேறு. கலகம் செய்யும் வீட்டாராக இருப்பினும் ஒருவேளை அவர்கள் அதைக் கண்டுணராலம்.
4
நாடுகடத்தப்படும் ஒருவர்போல், அவர்கள் கண்ணெதிரே பகல்நேரத்தில் உன் பொருள்களை எடுத்து வை. மாலை வேளையில், அவர்கள் கண்ணெதிரே நாடுகடத்தப்படுபவர்போல் புறப்படு.
5
அவர்கள் கண்முன்னே, சுவரில் துளையிட்டு அதன் வழியாய் அவற்றை வெளிக்கொணர்வாய்.
6
அவர்கள் கண்முன்னே அவற்றைத் தோள்மேல் வைத்து இருள் சூழ்ந்ததும் வெளியே தூக்கிச்செல். நிலத்தைப் பார்க்காதபடி உன் முகத்தை மூடிக்கொள். ஏனெனில், இஸ்ரயேல் வீட்டாருக்கு உன்னை ஓர் அடையாளமாக வைத்திருக்கிறேன்.”
7
எனக்குக் கட்டளையிட்டபடியே நான் செய்தேன். நாடுகடத்தப்படுகையில் கொண்டு போவதுபோல என் பொருள்களைப் பகல் வேளையில் வெளிக் கொணர்ந்தேன். மாலையில் என் கைகளால் சுவரில் துளையிட்டேன். இருள் சூழ்ந்ததும் அவற்றைத் தோளில் தூக்கிக்கொண்டு அவர்கள் கண்முன்னே வெளியேறினேன்.
8
காலையில் ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது:
9
“மானிடா! கலகம் செய்யும் வீடாகிய இஸ்ரயேல் வீட்டார் உன்னிடம், “நீ செய்கிறது என்ன?” என்று கேட்கவில்லையா?
10
நீ அவர்களுக்குச் சொல்: எருசலேமில் இருக்கும் மக்கள் தலைவனையும் அவனுடனிருக்கும் இஸ்ரயேல் வீட்டார் அனைவரையும் குறித்துத் தலைவராகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்:
11
நீ சொல்: உங்களுக்கு நான் ஓர் அடையாளமாய் இருக்கிறேன்: நான் செய்ததுபோல் அவர்களுக்கும் செய்யப்படும். அவர்கள் நாடுகடத்தப்பட்டோராயும் சிறைப்பட்டோரையும் செல்வர்.
12
அவர்களின் தலைவன் இருளில் தோளில் சுமையுடன் மதிலினூடே வெளியேறுவான். அவனை வெளிக்கொணர்வதற்காக மதிலைக் குடைவார்கள். கண்களால் நாட்டைப் பார்க்காதபடி அவன் தன் முகத்தை மூடிக்கொள்வான்.