10
நீ அவர்களுக்குச் சொல்: எருசலேமில் இருக்கும் மக்கள் தலைவனையும் அவனுடனிருக்கும் இஸ்ரயேல் வீட்டார் அனைவரையும் குறித்துத் தலைவராகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்:
11
நீ சொல்: உங்களுக்கு நான் ஓர் அடையாளமாய் இருக்கிறேன்: நான் செய்ததுபோல் அவர்களுக்கும் செய்யப்படும். அவர்கள் நாடுகடத்தப்பட்டோராயும் சிறைப்பட்டோரையும் செல்வர்.
12
அவர்களின் தலைவன் இருளில் தோளில் சுமையுடன் மதிலினூடே வெளியேறுவான். அவனை வெளிக்கொணர்வதற்காக மதிலைக் குடைவார்கள். கண்களால் நாட்டைப் பார்க்காதபடி அவன் தன் முகத்தை மூடிக்கொள்வான்.
13
நான் அவன்மீது என் வலையை வீசுவேன். அவனும் என் வலையை வீசுவேன்: அவனும் என் கண்ணில் சிக்கிக்கொள்வான். நான் அவனைக் கல்தேயரின் நாடாகிய பாபிலோனுக்குக் கொண்டு வருவேன். அந்த நாட்டைப் பார்க்காமலேயே அவன் அங்குச் செத்துப் போவான்.
14
அவனுக்கு உதவியாக அவனைச் சுற்றிலும் இருக்கும் அனைவரையும், அவனுடைய படைகள் அனைத்தையும், நான் எப்பக்கமும் சிதறடித்து, அவர்களை உருவிய வாளோடு பின்தொடர்வேன்.
15
நான் அவர்களை வேற்றினத்தாரிடையே ஓடச்செய்து, நாடுகளிடையே சிதறடிப்பேன். அப்போது நானே ஆண்டவர் என்பதை அவர்கள் அறிந்து கொள்வர்.
16
ஆயினும் அவர்களுள் சிலரை வாளுக்கும், பஞ்சத்துக்கும், கொள்ளைநோய்க்கும் இரையாக்காமல் விட்டுவைப்பேன். அவர்கள் தாங்கள் போய்ச்சேரும் வேற்றினத்தாரிடையே தங்கள் அருவருப்புகள் எல்லாவற்றையும்பற்றி எடுத்துக்கூறுவர். அப்போது அவர்கள் நானே ஆண்டவர் என்பதை அறிந்து கொள்வர்.
17
ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது:
18
“மானிடா! நடுக்கத்தோடு உன் அப்பத்தை உண்டு, அதிர்ச்சியோடும் அச்சத்தோடும் நீரைப் பருகு.
19
பின்னர், நாட்டின் மக்களை நோக்கிக் கூறு: இஸ்ரயேல் நாட்டிலுள்ள எருசலேமில் வாழ்வோரைப்பற்றித் தலைவராகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: அச்சத்தோடு தங்கள் அப்பத்தை உண்டு, திகைப்போடு நீரைப் பருகுவர். ஏனெனில், அங்கு வாழ்வோரின் வன்செயல்களை முன்னிட்டு அவர்களது நாட்டில் உள்ள அனைத்தும் பறிக்கப்படும்.
20
மக்கள் வாழும் நகர்கள் பாலைநிலமாகும்: நாடு பாழாய்ப் போகும். அப்போது நானே ஆண்டவர் என்பதை நீங்கள் அறிந்துகொள்வீர்கள்.
21
ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது:
22
“மானிடா! இஸ்ரயேல் நாட்டில் உங்களிடையே வழங்கிவரும் பழமொழி என்ன? 'நாள்கள் கடந்துகொண்டே செல்கின்றன: காட்சிகளோ பலிப்பதில்லை' என்கிறீர்கள்.