1
பின்னர் ஆவி என்னைத் தூக்கி ஆண்டவரது இல்லத்தின் கிழக்குநோக்கி இருக்கும் கீழை வாயிலுக்குக் கொண்டுவந்தது. அவ்வாயிற்பகுதியில் இருபத்தைந்து பேர் இருந்தனர். அவர்கள் நடுவே மக்கள் தலைவர்களான அசூரின் மகன் யாசனியாவையும் பெனாயாவின் மகன் பெலற்றியாவையும் கண்டேன்.
2
அவர் என்னை நோக்கி, “மானிடா! இந்நகரில் கெடுதலானவற்றைத் திட்டமிடுபவர்களும் தீய அறிவுரை கூறுபவர்களும் இவர்களே.
3
'வீடுகட்டும் காலம் அருகில் உள்ளது அன்றோ! இந்நகர் ஒரு பாண்டம், நாமோ இறைச்சி' என அவர்கள் சொல்கிறார்கள்.
4
ஆகவே, அவர்களுக்கெதிராக இறைவாக்குரை! மானிடா! இறைவாக்கு உரை!” என்றார்.
5
அப்போது ஆண்டவரது ஆவி என்மீது இறங்கியது. ஆண்டவர் என்னிடம் கூறுவது: “நீ சொல்: ஆண்டவர் கூறுவது இதுவே: இஸ்ரயேல் வீட்டாரே, நீங்கள் இவ்வாறெல்லாம் எண்ணுகிறீர்கள். உங்கள் உள்ளத்தில் உள்ளதை நான் அறிவேன்.
6
நீங்கள் இந்நகரில் பலரைக் கொலை செய்துள்ளீர்கள். இதன் தெருக்களைக் கொலையுண்டவர்களால் நிரப்பினீர்கள்.”
7
ஆகையால், தலைவராகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: “உங்களால் கொலை செய்யப்பட்டு இதனுள் போடப்பட்டவர்கள்தான் இறைச்சி: இந்நகர் ஒரு பாண்டம். உங்களையோ நான் இதனுள்ளிருந்து வெளியேற்றுவேன்.
8
வாளுக்கு நீங்கள் அஞ்சினீர்கள்: ஆனால் வாளையே உங்கள் மீது கொணர்வேன்,” என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.
9
நான் உங்களை இந்நகரினின்று வெளியேற்றி உங்களை மாற்றாரிடம் கையளித்து உங்களுக்கு எதிராகத் தீர்ப்பு வழங்குவேன்.
10
உங்களுக்கு நான் வழங்கும் தீர்ப்பு: நீங்கள் இஸ்ரயேலின் எல்லையில் வாளால் வீழ்வீர்கள். அப்போது நானே ஆண்டவர் என்பதை அறிந்து கொள்வீர்கள்.
11
இந்நகர் உங்களுக்கு ஒரு பாண்டமாக இராது: நீங்களும் இதிலுள்ள இறைச்சியாக இருக்கமாட்டீர்கள்: இஸ்ரயேலின் எல்லையில் நான் உங்களைத் தீர்ப்பிடுவேன்.