6
ஒருவரும் கை வைக்காமல் நொடிப்பொழுதில் வீழ்ச்சியுற்ற சோதோமின் பாவத்தைவிட, என் மக்களாம் மகளின் குற்றம் பெரிதாமே!
7
அவள் இளவரசர் பனியினும் தூயவராய்ப் பாலினும் வெண்மையராய்ப் பவளத்தினும் சிவந்த மேனியராய் நீல மணிக் கட்டழகராய் இருந்தனர்!
8
இப்பொழுதோ, அவர்கள் தோற்றம் கரியினும் கருமை ஆனது: அவர்களைத் தெருக்களில் அடையாளம் காண இயலவில்லை! அவர்கள் தோல் எலும்போடு ஒட்டியிருந்தது. காய்ந்த மரம்போல் அது உலர்ந்து போனது!
9
பசியினால் மாண்டவர்களினும் வாளினால் மாண்டோர் நற்பேறு பெற்றோர்! ஏனெனில், முன்னையோர் வயல் தரும் விளைச்சலின்றிக் குத்துண்டவர் போல் மாய்ந்தனர்!
10
இரங்கும் பெண்டிரின் கைகள் தம் குழந்தைகளை வேகவைத்தன! என் மக்களாகிய மகள் அழிவுற்றபோது பிள்ளைகளே அன்னையர்க்கு உணவாயினர்!
11
ஆண்டவர் தம் சீற்றத்தைத் தீர்த்துக் கொண்டார்: தம் கோபக் கனலைக் கொட்டினார்: சீயோனில் நெருப்பை மூட்டினார்: அது அதன் அடித்தளங்களை விழுங்கிற்று.