5
என் தலைவர் எதிரி போலானார்: அவர் இஸ்ரயேலை அழித்தார்: அதன் கோட்டை கொத்தளங்களைத் தகர்த்தார்: மகள் யூதாவின் அழுகையையும் புலம்பலையும் மிகுதியாக்கினார்.
6
தோட்டத்துப் பரணைப் பிரித்தெறிவது போலத் தம் கூடாரத்தையும் பிரித்தெறிந்தார்: சபை கூடும் இடத்தையும் அழித்தார்: சீயோனில் ஆண்டவர் விழாக்களையும் ஓய்வுநாளையும் மறக்கச் செய்தார்: அவர் வெஞ்சினமுற்று அரசனையும் குருவையும் வெறுத்து ஒதுக்கினார்.
7
என் தலைவர் தம் பலிபீடத்தை வெறுத்தொதுக்கினார். தம் திருத்தூயகத்தைக் கைவிட்டார்: அதன் கோட்டைச் சுவர்களைப் பகைவரிடம் கையளித்தார்: விழா நாளில் ஆரவாரம் செய்வதுபோல ஆண்டவரின் இல்லத்தில் அவர்கள் ஆரவாரம் செய்தனர்:
8
மகள் சீயோனின் மதிலை அழிக்க ஆண்டவர் திட்டமிட்டார்: அதற்கென நூலினால் அளந்தார்: அதை அழிப்பரை நிறுத்தத் தம் கையை மடக்கிக் கொள்ளவில்லை: அரணும் மதிலும் புலம்பச் செய்தார்: அவை ஒருங்கே சரிந்து வீழ்ந்தன.
9
அவளின் வாயிற்கதவுகள் மண்ணில் புதைந்து கிடந்தன: அதன் தாழ்களை உடைத்துச் சிதறடித்தார்: அவளின் அரசனும் தலைவர்களும் வேற்றினத்தாரிடையே உள்ளனர்! திருச்சட்டம் இல்லை: அவளின் இறைவாக்கினரும் ஆண்டவரின் காட்சி பெறவில்லை.