11
என் கண்கள் கண்ணீர் சொரிந்து சோர்ந்துள்ளன! என் குலை நடுங்குகின்றது! என் துயரத்தால் என் ஈரல் வெடித்துத் தரையில் சிதறுகின்றது! என் மக்களாகிய மகள் நசுக்கப்பட்டுள்ளாள்! நகர் வீதிகளில் குழந்தைகளும் மழலைகளும் மயங்கிக் கிடக்கின்றனர்!
12
அவர்கள் தங்கள் அன்னையரிடம், “அப்பம், திராட்சை இரசம் எங்கே?” என்று கேட்கின்றனர்! படுகாயமுற்றோரைப்போல, நகர் வீதிகளில் அவர்கள் மயங்கி வீழ்கின்றனர்! தாய் மடியில் உயிர்விட்டவர்போல் ஆகின்றனர்!
13
மகளே! எருசலேம்! உன் சார்பாக நான் என்ன சொல்வேன்? உன்னை எதற்கு ஒப்பிடுவேன்? மகள் சீயோனே! கன்னிப் பெண்ணே! யாருக்கு உன்னை இணையாக்கித் தேற்றுவேன் உன்னை? உன் காயம் கடலைப்போல் விரிந்துள்ளதே! உன்னைக் குணமாக்க யாரால் முடியும்?
14
உன் இறைவாக்கினர் உனக்காகப் பொய்யும் புரட்டுமான காட்சிகளைக் கண்டனர்: நீ நாடுகடத்தப்பட இருப்பதைத் தவிர்க்குமாறு, உன் நெறிகேடுகளை அவர்கள் உனக்கு எடுத்துச் செல்லவில்லை: அவர்கள் பொய்யையும் அபத்தங்களையும் காட்சியாகக் கண்டு, உனக்குப் பொய்வாக்கு உரைத்தனர்!
15
அவ்வழியாய்க் கடந்து செல்வோர் உன்னைப் பார்த்துக் கைகொட்டிச் சிரித்தனர்! மகள் எருசலேமை நோக்கித் தலையை ஆட்டிச் சீழ்க்கையடித்தனர்! “அழகின் நிறைவும் மண்ணுலகின் மகிழ்ச்சியுமாக இருந்த மாநகர் இதுதானா?” என்றனர்.
16
உன் எதிரிகள் அனைவரும் உன்னை நோக்கிக் கோணல்வாய் காட்டுகின்றனர்: சீழ்க்கையடித்துப் பற்களை நறநற வென்று கடிக்கின்றனர்: “நாம் அவளைப் பாழாக்கினோம்” என்றனர். “இந்நாளுக்காகவே நாம் காத்திருந்தோம்: இப்போதுதான் நம்மால் அதைக் காணமுடிந்தது” என்றனர்.
17
ஆண்டவர் தாம் திட்டமிட்டபடியே செய்தார்: நெடுநாள்களுக்குமுன் தாம் முன்னெச்சரிக்கை செய்தவாறு செயல்பட்டார்: ஈவிரக்கமின்றி இடித்துத் தள்ளினார்: உன் எதிரிகளை மகிழ்ச்சியடையச் செய்தார்: பகைவனின் ஆற்றலைப் பெருகச் செய்தார்.
18
அவர்களின் இதயம் என் தலைவனை நோக்கிக் கூக்குரலிடுகின்றது: மகள் சீயோனின் மதிலே! இரவும் பகலும் வெள்ளமெனக் கண்ணீர் பொழி! உனக்கு ஓய்வு வேண்டாம்! கண்ணீர் விடாமல் நீ இருக்க வேண்டாம்!
19
எழு! இரவில் முதற் சாமத்தில் குரலெழுப்பு! உள்ளத்தில் உள்ளதை என் தலைவர் திருமுன் தண்ணீரைப் போல் ஊற்றிவிடு! தெருமுனையில் பசியால் மயங்கி விழும் குழந்தைகளின் உயிருக்காக, அவரை நோக்கி உன் கைகளை உயர்த்து!
20
கண்ணோக்கும் ஆண்டவரே! எண்ணிப் பாரும்: யாருக்கு இப்படிச் செய்திருக்கின்றீர்? பெண்கள் தங்கள் கர்ப்பத்தின் கனிகளையே, கைக்குழந்தைகளையே, தின்ன வேண்டுமோ? குருவும், இறைவாக்கினரும் என் தலைவரின் திருத்தூயகத்தில் கொல்லப்படவேண்டுமோ?
21
வீதிகளின் புழுதியில் சிறியோரும் பெரியோரும் வீழ்ந்து கிடக்கின்றனர்! என் கன்னியரும் காளையரும் வாளால் வீழ்த்தப்பட்டனர் உமது சீற்றத்தின் நாளில் ஈவிரக்கமின்றி அவர்களைக் கொன்று குவித்தீர்!
22
திருவிழாவுக்கு அழைப்பது போல, எப்பக்கமும் எனக்கெதிராகப் பேரச்சத்தை வரவழைத்தீர்! ஆண்டவரது சீற்றத்தின் நாளில் உயிர்தப்பிப் பிழைத்தவரோ எஞ்சியவரோ எவரும் இல்லை! நான் பேணி வளர்த்தவர்களை என் எதிரி கொன்றழித்தான்!