புலம்பல் 1:12-22 - WCV
12
இவ்வழியாய்க் கடந்து செல்வோரே! உங்களுக்குக் கவலை இல்லையா? அனைவரும் உற்றுப் பாருங்கள்! எனக்கு வந்துற்ற துயர்போல வேறேதும் துயர் உண்டோ? ஆண்டவர் தம் வெஞ்சின நாளில் என்னைத் துன்பத்திற்கு உள்ளாக்கினர்.
13
மேலிருந்து அவர் நெருப்பினை என் எலும்புகளுக்குள் இறங்கச் செய்தார்! என் கால்களுக்கு வலை விரித்தார்! அவர் என்னைப் பின்னடையச் செய்தார்! அவர் என்னைப் பாழாக்கினார்! நாள் முழுவதும் நான் சோர்ந்து போகிறேன்.
14
என் குற்றங்கள் என்னும் நுகம் அவர் கையால் பூட்டப்பட்டுள்ளது: அவை பிணைக்கப்பட்டு, என் கழுத்தைச் சுற்றிக் கொண்டன: அவர் என் வலிமையைக் குன்றச் செய்தார்: நான் எழ இயலாதவாறு என் தலைவர் என்னை அவர்கள் கையில் ஒப்புவித்தார்.
15
என் தலைவர் என்னிடமுள்ள வலியோர் அனைவரையும் அவமதித்தார்: என் இளைஞரை அடித்து நொறுக்க அவர் எனக்கு எதிராக ஒரு கூட்டத்தை வரவழைத்தார்: மகள் யூதாவாகிய கன்னியை, ஆலையில் திராட்சைப் பழத்தைப் பிழிவதுபோல, என் தலைவர் கசக்கிப் பிழிந்தார்.
16
இவற்றின் பொருட்டு நான் புலம்புகின்றேன்: என் இரு கண்களும் கண்ணீரைப் பொழிகின்றன: என் உயிரைக் காத்து ஆறுதல் அளிப்பவர் எனக்கு வெகு தொலையில் உள்ளார்: பகைவன் வெற்றி கொண்டதால் என் பிள்ளைகள் பாழாய்ப் போயினர்.
17
சீயோன் தன் கைகளை உயர்த்துகின்றாள்: அவளைத் தேற்றுவார் யாருமில்லை: சூழந்து வாழ்வோர் யாக்கோபுக்கு எதிரிகளாயிருக்குமாறு ஆண்டவர் கட்டளையிட்டார்: எருசலேம் அவர்களிடையே தீட்டுப்பொருள் ஆயிற்று.
18
ஆண்டவரோ நீதியுள்ளவர்: நான் அவரது வாக்குக்கு எதிராகக் கிளர்ச்சி செய்தேன்: அனைத்து மக்களினங்களே, செவிகொடுங்கள்: என் துயரத்தைப் பாருங்கள்: என் கன்னிப்பெண்களும் இளைஞரும் நாடுகடத்தப்பட்டனர்.
19
என் காதலர்களை அழைத்தேன்: அவர்களோ என்னை ஏமாற்றினர்: என் குருக்களும் பெரியோரும் தங்கள் உயிரைக் காத்திட உணவு தேடுகையில், நகரில் பசியால் மாண்டனர்.
20
ஆண்டவரே, என்னைக் கண்ணோக்கும்! துயரில் நான் மூழ்கியுள்ளேன்! நான் பெருங் கலகம் செய்துள்ளேன்! என் குலை நடுங்குகின்றது! என் இதயம் வெடிக்கின்றது! வெளியே வாளுக்கு இரையாகினர் என் பிள்ளைகள்! வீட்டினுள்ளும் சாவு மயம்!
21
நான் விடும் பெருமூச்சை அவர்கள் கேட்டார்கள்: என்னைத் தேற்றுவார் யாரும் இல்லை: என் எதிரிகள் அனைவரும் எனக்கு நேரிட்ட தீங்கைப்பற்றிக் கேள்வியுற்றனர்: நீரே அதைச் செய்தீர் என மகிழ்ச்சி அடைகின்றனர்! நீர் அறிவித்த நாளை வரச் செய்யும்! அவர்களும் என்னைப்போல் ஆகட்டும்!
22
அவர்கள் தீச்செயல்கள் அனைத்தும் உம் திருமுன் வருவதாக! என் அனைத்துக் குற்றங்களின் பொருட்டு, நீர் என்னைத் தண்டித்தது போல், அவர்களையும் தண்டியும்! விம்மல்கள் மிகப் பல! என் இதயம் சோர்ந்துபோயிற்று!