2
பாலை நிலத்தில் பயணியர் விடுதி ஒன்று எனக்கு இருக்கக் கூடாதா? நான் மக்களைப் புறக்கணித்து அவர்களிடமிருந்து சென்று விடலாமே! ஏனெனில், அவர்கள் யாவரும் விபசாரிகள், நம்பிக்கைத் துரோகிகளின் கூட்டம்.
3
பொய்பேசத் தங்கள் நாவை வில்லைப்போல் அவர்கள் வளைக்கின்றனர்: உண்மைக்காக நாட்டில் யாரும் நிமிர்ந்து நிற்பதில்லை: அவர்கள் தீமையிலிருந்து தீமைக்கே சென்று கொண்டிருக்கிறார்கள்: என்னையோ அவர்கள் அறிந்து கொள்ளவில்லை, என்கிறார் ஆண்டவர்.
4
ஒவ்வொருவரும் அடுத்திருப்பவரைப் பொறுத்தவரை எச்சரிக்கையாய் இருக்கட்டும். எந்த உறவினரையும் நம்பவேண்டாம். ஏனெனில், எல்லா உறவினரும் ஏமாற்றுவர் என்பது உறுதி: அடுத்திருப்பவர் அனைவரும் புறணி பேசுகின்றனர்:
5
எல்லாரும் அடுத்திருப்பவரை ஏமாற்றுகின்றனர்: யாருமே உண்மை பேசுவதில்லை: பொய் பேசத் தங்கள் நாவைப் பழக்கியுள்ளார்கள்: குற்றம் புரிந்தே சோர்ந்து போனார்கள்.
6
நீயோ வஞ்சனை செய்வார் நடுவில் வாழ்கின்றாய்: தங்கள் வஞ்சனையின் காரணமாக என்னை அவர்கள் அறிந்து கொள்ள மறுக்கின்றார்கள், என்கிறார் ஆண்டவர்.
7
எனவே, படைகளின் ஆண்டவர் இவ்வாறு கூறுகின்றார்: நான் அவர்களைப் புடமிடுவேன்: பரிசோதிப்பேன்: என் மகளாகிய மக்களுக்கு நான் வேறு என்னதான் செய்யமுடியும்?
8
அவர்கள் நாக்கு கொல்லும் அம்பு: அது பேசுவது வஞ்சனை: எல்லாரும் தம் வாயால் அடுத்திருப்பவர்களோடு சமாதானமாய்ப் பேசுகின்றனர்: உள்ளத்திலோ அவர்களுக்குக் குழி பறிக்கின்றனர்.